இயக்குநரும், விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளருமான கோபி நயினார் அவ்வப்போது சமூக விஷயங்களில் ஆர்வம் காட்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கரடிபுத்தூர் எனும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தாங்கள் வசிக்க பட்டா நிலம் கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அந்த போராட்டத்தை இயக்குநர் கோபி நயினார் அவர்கள் முன்னின்று நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் மக்கள் வாழ்விடம் கேட்டு போராடுகிற இடத்தில் தமிழ்நாடு அரசு மண் குவாரி அமைக்க அனுமதி கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அரசு கைது செய்தது.
அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக அம்மக்களின் கோரிக்கைகளை அரசு செவிமடுத்து கேட்கவில்லை அதனால் எங்கள் அடையாள அட்டைகளை திருப்பி கொடுக்கிறோம் என்று கிராம மக்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டைகளை திருப்பி கொடுத்தனர். அதன் பிறகும் அவர்களின் கோரிக்கைகளை அரசு செவிமடுத்து கேட்காமல் அந்த இடத்தில் மண் குவாரி அமைப்பதிலேயே முனைப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. மண் குவாரி அனுமதி ரத்துசெய்யப்பட்டு குடிமனை பட்டா வழங்கும்வரை போராட்டத்தை அம்மக்கள் தொடர்ந்து நடத்திவருகிறார்கள்.
திமுகவை சாடிய கோபி நயினார்
இந்நிலையில் அண்மையில் இயக்குநர் கோபி நயினார் அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆளும் திமுக அரசு மீதும், அரசுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அதில் ஓரிடத்தில் திராவிடர் கழகத்தை சேர்ந்த மதிவதனி அவர்களை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
தொடரும் கருத்து மோதல்
அந்த பேட்டி வெளியான நாளிலிருந்து சமூக ஊடகங்களில் இயக்குநர் கோபி நயினார் மீது திராவிடர் கழக செயற்பாட்டாளர்களும், மதிவதனி மீது தலித் செயற்பாட்டாளர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோபி நயினாரின் கருத்துகளும், கேள்விகளும்
இந்த சிக்கலில் இயக்குநர் கோபி நயினார் அவர்கள் அளித்த பேட்டியில் அவர் கூறிய கருத்துக்களை தொகுத்து தருகிறோம்.
“தலித் வாழ்வாதாரத்திற்கான நிலத்தை முதலாளிகளின் வணிக லாபத்திற்காக இந்த அரசு வழங்குகிறது. இது எனக்கு ஒருவிதமான கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு ஜனநாயக கோபம். பெரியார், பெண் விடுதலை, கடவுள் மறுப்பு, சமூக நீதி, ஜனநாயகம் பற்றி பேசும் அமைப்பை நம்பி உழைக்கும் மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால் அந்த அமைப்பு அரசாக மாறும் பொழுது முதலாளித்துவ அரசாக மாறிவிடுகிறது. ஒரு ஜனநாயக அமைப்பு அரசாக மாறும் பொழுது ஜனநாயக அரசாக இருக்க வேண்டுமே ஒழிய முதலாளித்துவ அரசாக இருக்கக் கூடாது. அதுதான் தற்போது நிகழ்கிறது. நான் ஒரு பெரியாரிஸ்ட். தலித் மக்களின் உரிமைக்காக போராடுகிறேன். இது பெரியாரின் கொள்கைகளை பின்பற்றக்கூடிய ஒரு அரசு. பெரியாரை பின்பற்றக்கூடிய இந்த அரசு நான் ஒரு அற ரீதியான போராட்டத்தை கையில் எடுக்கும் போது என் மீது வழக்குப் போடலாமா? பெண் விடுதலை பற்றி உரக்கப் பேசிய பெரியாரை பின்பற்றக்கூடிய இந்த அரசு உரிமைக்காக போராடும் பெண்களின் மீது வழக்குப் போடலாமா?
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் போலத்தான் இவர்களும் நடந்து கொள்கிறார்கள். பாஜக இந்தியாவில் இருக்கும் பழங்குடிகளை அப்புறப்படுத்தி காடுகளை ஆக்கிரமிப்பது போல், தமிழகத்தில் இருக்கும் ஆறு, குளம், குட்டை போன்றவற்றில் அரசு தேவைக்காக மண் அள்ளப்படுகிறது. அது உண்மையாகவே அரசு தேவைக்காகத் தான் என்று உறுதிப்பட சொல்ல முடியுமா?
மக்கள் தங்களின் உரிமைக்காக போராடும் போது அவர்களை சட்ட அடிப்படையில் அணுகுவதை ஒரு ஜனநாயக அரசு செய்யாது. ஜனநாயக அரசில் வன்முறை இருக்காது. வன்முறை இருந்தால் அது ஜனநாயக அரசே கிடையாது. மக்கள் பிரதிநிதியாக போராட்டம் நடத்தும்போது என் மீது ஏன் வழக்கு போடுகிறீர்கள்? எல்லா பழிகளையும் காவல்துறையின் மீது போட்டால், காவல்துறை அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா?
ஒரு திராவிட மாடலில் இயற்கை வளங்களை எப்படி பாதுகாப்பீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள். திராவிட மாடலில் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை எந்த அளவுக்கு மதிப்பீர்கள்? திராவிட மாடலில் தலித் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது? வெறும் திராவிட மாடல்..அது ஒரு பெயர்ச்சொல்.
பெரியாரைப்போல், அம்பேத்கரைப்போல், மார்க்சிஸ்ட்டைப் போல் வாழ விரும்புபவன் நான். ஏனென்றால் இவர்கள்தான் ஜனநாயக வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவர்கள். இவர்களது பெயரை சொல்லும் ஒரு அரசு அப்படித்தான் இருக்க வேண்டுமென நம்புகிறேன். அப்படி இல்லையென்றால் அது ஏமாற்றத்தை அளிக்கிறது.
தமிழகத்தில் உங்களது ஆட்சியில் தலித் மக்களுக்கு வீட்டுமனை இல்லை என்பது அவமானம் இல்லையா? அரசு புறம்போக்கு நிலங்களை முதலாளிகளுக்கு வழங்குகிறீர்கள். என்ன பாரபட்சம் இது? முதலாளிகளின் தேவைகளை நிரப்புகிறீர்கள். முதலாளி அல்லாத எங்களது தேவைகளை வஞ்சிக்கிறீர்கள். இவ்வளவு நாள் நீங்கள் பேசும் திராவிடம் என்ற வார்த்தையே ஒரு வணிகம் எனத் தெரிகிறது. திராவிட மக்கள் எப்படி சீரழிந்தாலும் அதைப்பற்றி உங்களுக்கு கவலை இல்லை. மீனவர்கள், பழங்குடியினர், தலித்கள், பிற்படுத்தப்பட்டோர் குறித்து உங்களுக்கு என்ன அக்கறை உள்ளது? உழைக்கும் மக்களான எங்களிடம் சட்டம் பேசும் அரசு எல்லாரிடமும் சட்டம் பேசுகிறதா?
மொழியைப் பற்றி பேசுகிறீர்கள். முதலில் மொழி பேசும் இனங்களை நீங்கள் பாதுகாத்தால் தான் மொழியை பாதுகாக்க முடியும். திராவிட இயக்கத்தினர் யாராவது வேங்கைவயல் பிரச்சனை குறித்து பேசினார்களா? யார் மலம் கலந்த நீரைக் குடித்தானோ அவனே குற்றவாளியாக ஆக்கப்பட்டிருக்கிறான். இது எவ்வளவு மோசமான அரசியல் அணுகுமுறை?
குழந்தைகளின் நலனை காக்கக் கூடிய ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துகிறீர்கள். எங்களது வாழ்க்கையை தீர்மானிப்பவனாக ஒரு ஒப்பந்தக்காரன் இருக்கிறான். இதைப்பற்றி திராவிட இயக்கத்தினர் பேசியிருக்கிறார்களா? கடவுள் இல்லை என்பது மட்டும்தான் பகுத்தறிவா? இயற்கை வளங்களை சூறையாடக்கூடாது என்பது பகுத்தறிவு கிடையாதா? நீ ஒரு பகுத்தறிவாளனாக இருந்தால் என் போன்றவர்கள் மீது வழக்குப்போடாமல் அணைத்துக் கொள்ள வேண்டுமா இல்லை என் மீது வழக்குப் பதிந்து அச்சுறுத்த வேண்டுமா? திராவிடம் என்ற பெயரில் ஒரு சர்வாதிகாரியாக நீ திகழ்கிறாய். அவன் சனாதன தர்மம் என்ற பெயரில் சர்வாதிகாரியாக இருக்கிறான். சர்வாதிகாரம் எதன் பேரில் இருந்தால் என்ன?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.