தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. மும்மொழிக் கொள்கை, நீட் ரத்து, இப்படி பல விஷயங்களில் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவே தனது கருத்துக்களை ஆளுநர் முன்வைத்து வருகிறார். அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது இந்த மோதல் போக்கை அதிகரித்தது. குறிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதா, பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு இயற்றிய சட்ட மசோதா ஆகியவற்றிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று(ஏப்.8) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பில் கூறப்பட்டவை:
1. ஆளுநரின் செயல்பாடு ஏற்புடையதல்ல
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீதான ஆளுநரின் செயல்பாடு ஏற்புடையதல்ல. தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிரானது.
2. ஆளுநர் செய்தது சட்டவிரோதம்
10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் செல்லாது. ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை. பேரவையில் மீண்டும் நிறைவேற்றி மசோதாவை அனுப்பிய நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் வழங்குவது, ஒப்புதலை நிறுத்திவைப்பது உள்ளிட்ட பிரிவுகளை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
3. ஆளுநருக்கு VETO அதிகாரம் கிடையாது
10 மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் செயல்படாமல் இருந்துள்ளார். அரசியல் சாசனப்படி ஆளுநர் மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டும்.
4. ஆளுநருக்கு காலக்கெடு
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பக்கூடிய அனைத்து மசோதாக்கள் மீதும் 30 முதல் 90 நாட்களுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.
5. அதிகாரத்தை கையில் எடுத்த உச்சநீதிமன்றம்
அரசியல் சாசனப்பிரிவு 142-ன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்தும், அந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய 10 மசோதாக்கள் என்னென்ன?
1. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, 2020
2. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, 2020
3. தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, 2022
4. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, 2022
5. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, 2022
6. தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டங்கள் (2வது திருத்தம்) மசோதா, 2022
7. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை திருத்த மசோதா, 2022
8. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, 2023
9. தமிழ்நாடு பல்கலைக்கழகம் (2வது திருத்தம்) மசோதா, 2022
10. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, 2023
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200 கூறுவது என்ன?
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200ன்படி ஆளுநர் சுயேச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாது. ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை.மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200ன் படியே ஆளுநர் செயல்பட வேண்டும். வெறுமனே மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூற முடியாது. சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடியாது. ஆளுநர் ஒருமுறை மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டால் அதன் தொடர் நடவடிக்கையை அவர்தான் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு போராடும்..தமிழ்நாடு வெல்லும்..!
“ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.
தமிழ்நாடு போராடும்..! தமிழ்நாடு வெல்லும்..!” என சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தார்.
ஆளுநரின் அதிகாரம் பறிபோனது
தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சிநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்பட உள்ளார்.
பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.