உத்தரகாண்ட் மாநிலம் டேரடூனில் சுமார் 100 கி.மீ வேகத்தில் வந்த கார் ஒன்று லாரியின் பின் பகுதியில் மோதிய சம்பத்தில் காரில் இருந்த 3 பெண்கள் உட்பட 6 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாதம் 12 ஆம் தேதி அன்று, உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் அருகே, உள்ள சௌக் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு (ONGC) அருகே அதிகாலை சுமார் 1.30 மணிக்கு இன்னோவா கார் ஒன்று சுமார் 100 கி.மீ வேகத்தில் வந்துள்ளது. அந்த பகுதியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் இந்த கார் அதிவேகமாக மோதியது. விபத்தில் சிக்கிய கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதனால், காரில் இருந்த 25 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஆறுபேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.. உயிரிழந்தவர்கள் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் 5 பேர் டேராடூனையும், ஒருவர் சம்பாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. குணீத் சிங், 19, காமக்ஷி சிங்கால், 20, நவ்யா கோயல், 23, ரிஷப் ஜெயின், 24, மற்றும் அதுல் அகர்வால், 24, மற்றும் ஹிமாச்சலின் சம்பாவைச் சேர்ந்த குணால் குக்ரேஜா, 23, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 வயதான சித்தேஷ் அகர்வால் என்ற அடையாளம் தெரியாத ஏழாவது நபர் மட்டும் படுகாயம் அடைந்த நிலையில், அருகிலிருந்த சினெர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், சம்பவம் குறித்தான எந்த தகவலையும் தற்போது பெற முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.