திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜெகன் (15) இவர் நேற்றைய தினம் பள்ளி வளாகத்தின் மாடியில் உள்ள வகுப்பறையை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது தவறுதலாக அங்கிருந்து துடைப்பம் கீழே இருந்த அந்த பள்ளி தலைமை ஆசிரியரின் கார் மீது விழுந்தது. இதனை கண்ட தலைமை ஆசிரியர் ஆத்திரமடைந்து மேலே உள்ள வகுப்புக்கு சென்று இந்த செயலை யார் செய்தது என்று கேட்டுள்ளார். ஜெகன் தான் தெரியாமல் தவறுதலாக இதனை செய்ததாக கூறியுள்ளார்.
மாணவர் கூறிய இந்த பதிலை கேட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் கோபத்தில் மாணவன் ஜெகனை பயங்கரமாக அடித்துள்ளார். இதனால் மாணவன் ஜெகனுக்கு அவரது கையில் எலும்பு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டது மட்டுமின்றி உடலில் பல பாகங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்த பின் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் மாணவனின் நிலையைக் கண்டு மிகவும் வேதனையடைந்தனர். பின்பு பெற்றோர்கள் தாங்களே மகனை அந்த பகுதியில் உள்ள தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிக்கிச்சைக்காகக் கூட்டிச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் மாணவர் ஜெகனின் கையில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது எனவே அவரை முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மாணவன் மற்றும் அவரது பெற்றோர்கள் அரசு பள்ளி தலைமையாசிரியர் சந்திரமோகன் மீது தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் கதிரேசன் தலைமை ஆசிரியர் சந்திரமோகனை விசாரித்து வருகிறார். மேலும் பள்ளியில் மாணவன் தூய்மை பணி செய்தது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மாணவனை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் இவ்வாறு நடத்தியது குறித்து அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.