ரோஹிங்கியா இனம்
இந்திய கடற்படை அதிகாரிகள், கடந்த 15ம் தேதி டெல்லியில் வசித்து வந்த ரோஹிங்கியா இன மக்கள் 40 பேரை, கண்களை கட்டி அந்தமான் கடலில் இறக்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அதிகாரிகள், டெல்லியில் வசித்து வந்த ரோஹிங்கியா அகதிகள் பலரைக் கைது செய்துள்ளனர். அவர்களில் 40 பேர் கண்கள் கட்டப்பட்டு அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து இந்திய கடற்படை கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டனர் என கூறியுள்ளது.
மேலும், ”அந்தமான் கடலை கடந்த பிறகு, மியான்மர் எல்லையில் உள்ள தீவிற்கு நீந்திச் செல்லுமாறு வலுக்கட்டாயமாக அவர்கள் இறக்கி விடப்பட்டுள்ளனர். அங்கு இறக்கிவிடப்பட்ட அகதிகள் நீந்தி கரையை அடைந்து உயிர் பிழைத்ததாக” ஐ.நாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் நிலவும் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது போன்ற மனிதத்தன்மையற்ற, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிற செயல்களை இந்திய அரசு தவிர்க்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து செல்லும் இடமெல்லாம் துரத்தப்படும் ரோஹிங்கியா இன மக்களுக்கு, உலகில் வாழ எங்குமே அனுமதி இல்லையா?. இந்த பிரச்சனையை உலக நாடுகள் கையாளுவதில் என்ன சிக்கல்கள் உள்ளது. சொந்த நாட்டில் இருந்தும் அகற்றப்பட்டு, மற்ற நாடுகளில் இருந்தும் விரட்டப்படும், ரோஹிங்கியா இன மக்கள் யார்? உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் இவர்களின் வரலாறு குறித்து பார்க்கலாம்.
மியான்மரும் – ரோஹிங்கியா இன மக்களும்
உலகளவில் மக்கள் தங்கள் நாடுகளில் உரிமை மறுக்கப்பட்டு, வாழ வழியின்றி நிர்கதியாய் இடம்பெயர்ந்து, வேறொரு நாட்டிற்கு அகதிகளாக செல்வது நீண்ட நாளாக இருந்து வரும் முறை தான். ஆனால், காலகாலமாகவே மக்கள் சொந்த நாடுகளில் இருந்து குழுக்களாகவோ அல்லது ஒரு இனமாகவோ விரட்டப்படுகின்றனர். இதை வலுவான நாடுகளோ அல்லது மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டவர்களோ இதனை தொடர்ந்து செய்து கொண்டே தான் உள்ளனர்.
மனிதாபிமான ரீதியில் இந்த பிரச்சனையை உலக நாடுகள் கையாளாமல், வேறு விதமாக அணுகுவதால், இடம்பெயரும் மக்கள் முகவரியே இல்லாமல் செத்துமடியும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ரோஹிங்கியா என்பது மியான்மரில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் அதிகமாக உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இருப்பினும் அவர்கள் நாட்டின் பிற பகுதிகளிலும், அண்டை நாடான வங்கதேசம் மற்றும் மற்ற நாடுகளின் அகதிகள் முகாம்களிலும் காணப்படுகிறார்கள். இவர்கள் உலகில் மிகவும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினராகக் கருதப்படுகிறார்கள். 21ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ராக்கைன் மாநிலத்தின் மக்கள் தொகையில் 3ல் 1 பங்காக ரோஹிங்கியா மக்கள் இருந்துள்ளனர். மீதமுள்ளவற்றில் பௌத்தர்கள் குறிப்பிடத்தக்க விகிதத்தில் இருந்தனர்.
ரோஹிங்கியா அரசியல் தலைவர்கள், தங்கள் சமூகம் ஒரு தனித்துவமான இன, கலாச்சார மற்றும் மொழியியல் சமூகம் என்றும், இது 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதன் வம்சாவளியைக் குறிக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.
இருப்பினும், அதிகமான பௌத்த மக்களை கொண்ட மியான்மரில், ரோஹிங்கியாக்களை ஒரு அந்நியர்களாவும், இவர்கள் தங்கள் நாட்டு மக்கள் இல்லை, வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களாகவே கருதுகின்றனர்.
1948ம் ஆண்டு மியான்மர் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற சிறிது நேரத்திலேயே, எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை பெறலாம் என்பதை வரையறுக்கும் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ரோஹிங்கியாக்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், இந்தச் சட்டம் மியான்மரில் குறைந்தது 2 தலைமுறைகளாக வாழ்ந்த குடும்பங்கள் அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதித்தது.
1970களில் இருந்து, ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியா மக்கள் மீதான அடக்குமுறைகள் லட்சக்கணக்கான மக்களை அண்டை நாடான வங்கதேசம், தாய்லாந்து மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இத்தகைய அடக்குமுறைகளின் போது, அகதிகள் பெரும்பாலும் மியான்மர் பாதுகாப்புப் படையினரால் கற்பழிப்பு, சித்திரவதை, தீ வைப்பு மற்றும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மியான்மரில் உள்ள அனைத்து ரோஹிங்கியாக்களும் நாடற்றவர்களாக உள்ளனர். இவர்களால் மியான்மரில் “பிறப்பால் குடியுரிமை” பெற முடியவில்லை. ஏனெனில் 1982ம் ஆண்டு திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் ரோஹிங்கியாக்களை, அங்கீகரிக்கப்பட்ட 135 தேசிய இனக்குழுக்களின் பட்டியலில் சேர்க்கவில்லை.
20ம் நூற்றாண்டின் கடைசி காலாண்டிலிருந்து, பல ரோஹிங்கியாக்கள் அவ்வப்போது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பௌத்த சமூகத்திற்கும், ரோஹிங்கியங்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் அல்லது மியான்மர் இராணுவத்தின் மூலம் அவர்கள் குறி வைக்கப்பட்டனர். 1978, 1991–92, 2012, 2015, 2016 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் நடந்த இடப்பெயர்வுகளால், மியான்மரின் பிற பகுதிகளுக்கு அல்லது பிற நாடுகளுக்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ரோஹிங்கியாக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுவரை வெளியேறியுள்ள ரோஹிங்கியா இன மக்கள்
1970களின் பிற்பகுதியிலிருந்து, துன்புறுத்தல் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரோஹிங்கியாக்கள் மியான்மரை விட்டு வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மிகச் சமீபத்திய தரவுகளின்படி, 2012 முதல் 1,68,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் மியான்மரை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2016 முதல் ஜூலை 2017 வரை 87,000க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றதாக சர்வதேச இடம் பெயர்வு அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது வெறும் சிறிய தொகையிலான கணக்கெடுப்புதான். எவ்வளவு மக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் என்ற உண்மை நிலவரம் வெளியாவதில்லை.
அண்டை நாடுகளில் ரோஹிங்கியா இன மக்கள்
மியான்மரில் தொடர்ந்து ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக நடந்த வன்முறையால், பல்வேறு குழுக்களாக பிரிந்து மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். வங்கதேசம் இதில் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரோஹிங்கியா பாதுகாப்பு ஆயுதக் குழுவுக்கும் மியான்மர் ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஒடுக்குமுறையில், ரோஹிங்கியா மக்கள் பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகினர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி படையெடுத்தனர். இதனை ஒரு “இன அழிப்பு” என ஐநா வரையறுத்துள்ளது.
வங்கதேசத்தில் தற்காலிக முகாம்களில் மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வசிக்கின்றனர் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. வங்கதேசமும் இவர்களை அரவணைத்துக் கொள்ள விரும்பவில்லை. இன்றுவரை அகதிகளாகவும், சட்டவிரோத குடியேறிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.
வங்கதேச அரசு, ரோஹிங்கியா மக்களை இடம் மாற்றும் பொருட்டு, வாழத் தகுதியற்ற இடமாக கருதப்படும் ஒரு தீவில் அவர்களை தஞ்சம் புகுத்த திட்டமிட்டது. ஆனால், எப்போது வேண்டுமானாலும் அப்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என கூறப்பட்டது. முதன்முதலில் 2015ம் ஆண்டு இத் திட்டத்தை வங்கதேச அரசு முன்மொழிந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
10 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கிய இன மக்கள் தற்போது, வங்கதேசத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வளவு மக்கள் தொகையை கையாளும் அளவிற்கு நாட்டில் நிதி நிலைமை சீராக இல்லை என வங்கதேச அரசும் கை விரித்துள்ளது.
இந்தியாவும் ரோஹிங்கியா இனமும்
சர்வதேச அளவில் நிலைமை இவ்வாறு உள்ள நிலையில், இந்தியாவிலுள்ள 40,000 ரோஹிங்கியாக்களின் நிலையும் கவலைக்குரியதாகவே பார்க்கப்படுகிறது. இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில், ரோஹிங்கியா முஸ்லிம்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. “ரோஹிங்யாக்கள் நேரடியாக இந்தியாவுக்குள் வருவதில்லை. வங்கதேசத்தின் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள்” என்பதை குடியுரிமைச் சட்டத்தில் ரோஹிங்கியாக்கள் சேர்க்கப்படாததற்கான காரணமாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தியாவிற்க்குள் நேரடியாக நுழையும் ரோஹிங்கியா இன மக்கள், வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வழியாக வருகின்றனர். இதனால் மணிப்பூர் மாநில எல்லைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஜம்மு காஷ்மீர், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் இவர்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள 40,000 ரோஹிங்கியா இன மக்களில் கிட்டத்தட்ட 20,000 பேர் வரை ஐநா வில் பதிவு செய்யப்பட்டவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா இன மக்களை நாடு கடத்துவதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம், 7 ரோஹிங்யாக்களை நாடு கடத்தி, மியான்மர் ராணுவத்திடம் இந்திய அரசு ஒப்படைத்தது. இந்த மக்களை நாடு கடத்துவது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றமும் இதற்கு எந்த தடையும் விதிக்காததால், அவ்வப்போது இந்த நாடுகடத்தும் பணிகளும் நடைபெற்று தான் வருகிறது.
ரோஹிங்கியாக்களை நாடுகடத்த வேண்டும் எனும் அரசின் கொள்கை முடிவில் தலையிட வேண்டாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட, ரோஹிங்கியா மக்களை கடலில் இறக்கி விட்டதாக கூறப்படும் சம்பவமும் பார்க்கப்படுகிறது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கும் பழைய வழக்குகளுடன் சேர்த்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அகதிகளை எவ்வாறு கையாளுகிறது இந்தியா
1951ம் ஆண்டு ஐ.நா. மாநாடு மற்றும் 1967 ஆம் ஆண்டு நெறிமுறையின் படி, நாடற்ற நபர்களை அவர்களின் சொந்த நாடு இனி அங்கீகரிக்கவில்லை என்றால், அவர்களை அகதிகளாகக் கருதலாம். ஆனால், இந்த கொள்கையில் இந்தியா கையெழுத்திடவில்லை. எனவே, இந்தியாவை பொறுத்தமட்டில் அகதிகளை இவ்வாறு கையாள வேண்டும் என்கிற விதிமுறை இல்லை.
அகதிகளாக வரும் மற்ற நாட்டினர்கள் அல்லது நாடற்றவர்களாக கருதப்படுபவர்கள் இன, சமூக, மொழி பாகுபாடுகளை அனுபவிக்கின்றனர் என்பதை மறுக்க இயலாது.
குடியுரிமை திருத்தச் சட்டப்படி, 2014 டிசம்பர் 31க்கு முன்பு இந்தியாவுக்குள் வந்தவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள் மற்றும் இவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறும் வசதி வழங்கப்படுகிறது. இதில் இலங்கை தமிழர்கள் இணைக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இச்சட்டத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் வெடித்தது.
இந்தியாவில் அகதிகள் என்பவர்கள் சரியாக மதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. மிகவும் கீழான வேலைகளுக்கு அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். முறையான ஆவணங்கள் இல்லாதது, போன்றவற்றினால் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. ஒரு வித பயத்துடனே சமூகத்தில் வாழ வேண்டிய நிலை உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
சுதந்திரம் பெற்றதிலிருந்து தற்போது வரை ஒரு முறையான திட்டம் இல்லாமல் தான் அகதிகளை இந்திய அரசு கையாண்டு வருகிறது. அதற்கான சான்று தான் ரோஹிங்கியா இன மக்களும்.
ரோஹிங்கியா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
ஒரு நாட்டில் நடைபெற்ற இனப்பாகுபாடு, இனப் படுகொலைகள் சம்பவத்தின் காரணமாக, மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகும் பட்சத்தில், மீண்டும் அவர்கள் சொந்த நாடு திரும்புவது அவர்கள் விருப்பம் என்றும், வலுக்கட்டாயமாக அவர்கள் வெளியேற்றப்பட கூடாது எனவும் சர்வதேச சட்ட விதிகள் கூறுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனையை சர்வதேச சமூகங்களும், அரசுகளும் சரிவர கையாண்டு மக்களை பாதுகாக்க வேண்டும்.