பாகம் -2
ஏற்கனவே கூறியதுபோல, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் யூதர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது. அதன்பிறகு, யூதர்கள் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேலில் குடியேற ஆரம்பித்தனர்.
பாலஸ்தீன புரட்சி
1929ஆம் ஆண்டு ஜெருசலேம் எழுச்சிக்குப் பிறகு பாலஸ்தீனம் எங்கும் மக்களிடையே ஒரு விதக் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. அமைதியான கிராமங்களில் இருந்து ஆரவாரம் மிக்க நகரங்கள் வரை பார்க்கும் இடமெல்லாம் மக்கள் ஒன்றுகூடி அரசுக்கு எதிராகவும், யூதர்களின் குடியேற்றத்தை நிறுத்தக் கோரியும் குரல் கொடுத்து வந்தனர்.
எத்தனை முறை கோரிக்கை மனுக்களை அளிப்பது? எத்தனை முறை மன்றாடுவது? எங்கள் வேண்டுகோளைப் பரிசீலித்துப் பார்க்கும் எண்ணம் பிரிட்டனுக்கு இருக்கிறதா, இல்லையா? நாங்கள் கொடுக்கும் மனுக்களை அவர்கள் படித்தாவது பார்க்கிறார்களா? என அரசின் மீது மக்களுக்கு கடும் கோபம் இருந்தது.
நாங்கள் யூதர்களையும் அரேபியர்களையும் சமமாகத்தான் நடத்துகிறோம் என்று பிரிட்டன் சொல்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பாலஸ்தீனர்களின் சிறு போராட்டங்கள்கூடக் கொடூர ஒடுக்குமுறைக்கு உள்ளாகும்போது எங்கள் வாழ்வின்மீது உண்மையில் பிரிட்டனுக்கு அக்கறை இருக்கிறதா? இந்த அரபு பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? என மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நிலங்களை மீட்க வேண்டும். எங்கள் புனித நகரங்களை கைப்பற்றி உலக நாடுகளின் ஆதரவோடு இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதலால் பாதிக்கப்படும் மக்களை மீட்க வேண்டும். சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேற்றப்படும் எங்கள் மக்களையும், நிலங்களையும் மீட்டெடுத்து விடுதலையை பெற வேண்டும் என்பதே பாலஸ்தீன மக்களின் கோரிக்கையாக இருந்தது.
பிரச்னையை தீர்க்க முடியாத பிரிட்டன் ஆட்சியாளர்கள், 1948ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து அமெரிக்கா இஸ்ரேலை தனி நாடக அங்கீகரித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பாலஸ்த்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்க்கு மறுநாளே போர் தொடங்கியது. அண்டை அரபு நாடுகள் படையெடுத்தன.
இந்த போரில் மட்டும் சுமார் 7,50,000 பாலஸ்த்தீனியர்கள் தங்களது வீட்டை விட்டும், தாயகத்தை விட்டும் தப்பினர். பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதனை பாலஸ்த்தீனர்கள் ‘அல் நக்பா’ அதாவது பேரழிவு என குறிப்பிடுகின்றனர்.
இந்த போர் 1949 வரை நீடித்தது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது, பெரும்பாலான பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. போரின் போது ஜோர்டான் ஆக்கிரமித்த பகுதி வெஸ்ட் பேங்க் அதாவது ‘மேற்கு கரை’ என அறியப்படுகிறது. எகிப்து ஆக்கிரமித்த பகுதிதான் காஸா.
முக்கிய பகுதியாக கருதப்பட்ட ஜெருசலேமும் இரண்டாக பிரிந்தது. மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலிய படைகளும், கிழக்கு ஜெருசலேமை ஜோர்டானிய படைகளும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. ஆனால், அமைதி ஒப்பந்தம் ஏற்படவே இல்லை. அனைத்து தரப்பும் ஒருவருக்கொருவர் மீது பழி போட, தொடந்து நிறைய போர்களும் சண்டைகளும் நீடித்தன.
ஆறுநாள் தொடர் போர் – கைப்பற்றப்பட்ட முக்கிய பகுதிகள்
1967ல் நடந்த 6 நாள் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலமேயும், மேற்கு கரையையும் ஆக்கிரமித்தது. மேலும், சிரியன் கோலன் குன்றுகள், காஸா மற்றும் எகிப்தின் சினாய் தீபகற்பத்தின் பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
பாலஸ்த்தீனியர்கள் பலரும் அவர்களது சந்ததியினரும் காஸா, மேற்கு கரை மற்றும் அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் தஞ்சமடைந்தனர்.
அகதிகளாக சென்றவர்களோ அல்லது அவர்களது சந்ததியினரோ, அவர்களது சொந்த வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க மறுத்தது இஸ்ரேல். மீண்டும் அவர்கள் அனுமதிக்கப்பட்டால் அதனை கையாள முடியாது என்றும், அது யூத தேசம் என ஒன்று இருப்பதற்கே அச்சுறுத்தலாக அமையும் எனக் கூறியது இஸ்ரேல்.
இஸ்ரேல் இன்னமும் மேற்கு கரையை ஆக்கிரமித்துள்ளது. எனினும் 2005-ல் காஸாவில் இருந்து விலகியது. ஆனால் இந்த சிறிய கடற்கரையோர துண்டு பகுதியான காஸாவை ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாக ஐநா கருதுகிறது.
இஸ்ரேல் மொத்த ஜெருசலேமையும் தனது தலைநகர் என கூறுகிறது. அதே சமயம் பாலஸ்த்தீனம் கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால பாலஸ்த்தீன நாட்டின் தலைநகர் என கூறுகிறது.
இஸ்ரேலில் தொடர் குடியேற்றத்தில் இறங்கிய யூதர்கள்
இஸ்ரேல் நாட்டில், கடந்த 50 ஆண்டுகளில் மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் பல குடியிருப்புகளை இஸ்ரேல் அரசு கட்டியது. இப்போது அங்கு கிட்டதட்ட 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் வாழ்கிறார்கள்.
சர்வதேச விதிகளின் படி இந்த குடியிருப்புகள் சட்டவிரோதமானவையாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. அவர்களது நிலைப்பாடும் இதுதான். ஆனால் இஸ்ரேல் இதனை நிராகரிக்கிறது.
மேற்கு கரையில் வசிக்கும் பாலஸ்த்தீனர்கள் இஸ்ரேல் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், பணயக் கைதிகளாக வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால், பாலஸ்த்தீனர்களின் வன்முறையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
மேற்கு கரையில் குடியேறியுள்ள யூதர்களிடமிருந்து, தினமும் குறைந்தது 3 தாக்குதல்களையாவது பாலத்தீனர்கள் எதிர்கொள்வதாக ஐநா சமீபத்தில் தெரிவித்திருந்தது. கடந்த சில மாதமாக குறைந்தபட்சம் 3 பாலத்தீன குடும்பங்களாவது, தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
அதே சமயம் இந்த பிராந்தியத்தில் பாலஸ்த்தீனர்களால் யூதர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அறவழிப்போராட்டமாக இருந்து வந்த பாலஸ்தீன மக்களின் விடுதலை போராட்டம், ஆயுதப்போராட்டம் மாறிய காரணம் என்ன? யார் இந்த ஹமாஸ் குழுவினர் என்பதை குறித்து அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.