சமீப காலமாக இஸ்ரேல், பாலஸ்தீன், காசா, ஹமாஸ் குழுவினர் போன்ற செய்திகள் உலகம் முழுவதும் அறியப்பட்டவையாக மாறியுள்ளது. எதற்காக நடக்கிறது இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையேயான போர், யாரிடம் இருந்து விடுதலை கோருகிறது இஸ்ரேல் போன்ற தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் – யாருக்கு உரிமை?
மத்திய தரைக்கடலில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஜெருசலேம் நகரம். இது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு புனித தலமாக விளங்கி வருகிறது.
பழைய ஜெருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது பழைய ஜெருசலேம்.
நபிகள் நாயகத்தின் வாழ்க்கையுடன் இணைந்த ஜெருசலேம் நகரை இஸ்லாமியர்கள் புனிதமான இடமாக கருதுகின்றனர். முகமது நபி ஜெருசலேமிலிருந்து விண்ணகப் பயணம் சென்று திரும்பினார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.
பைபிளின் புதிய ஏற்பாட்டின்படி, இயேசு கிறிஸ்து தனது இறுதி காலத்தில் வாழ்ந்த இடம் ஜெருசலேம். அவர் உயிர்நீத்த சிலுவை ஜெருசலேமில் கண்டெடுக்கப்பட்டது. எனவே கிறித்தவர்கள் ஜெருசலேத்தை புனித நகரமாக கருதுகின்றனர்.
பைபிளின் பழைய ஏற்பாட்டின்படி, கி.மு. 1000 ஆண்டுகளில் இஸ்ரேல் மன்னர் தாவீது இஸ்ரேல் ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைநகராக ஜெருசலேம் நகரை நிறுவினார். தாவீது மன்னரின் மகன் சாலமன் ஜெருசலேமில் புகழ்வாய்ந்த ஆலயம் ஒன்றை கட்டமைத்தார். எனவே, இஸ்ரேலுக்கு ஜெருசலேம் புனித நகராக மாறியது.
யூதர்கள், தங்களது முதல் கோயில் ஜெருசலேமில் இருந்ததாகவும் அதனால் அதில் தங்களுக்கு வழிபட முழு உரிமை உள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆனால், தற்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜெருசலேம் எந்த மக்களுக்கும் தலைநகர் இல்லை என கூறுகிறார்.
இடம்பெயர்ந்த யூதர்கள்
யூத குடியேறிகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு-வட ஆப்பிரிக்கா பகுதியிலிருந்து வருகிறார்கள்.
யூத மக்கள் இஸ்ரேல் நாட்டின் தற்போதைய இருப்பிடமான இஸ்ரேல் தேசத்தில் தோன்றிய ஒரு இன-மதக் குழுவாகவே அறியப்படுகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள சில இடங்களிலிருந்தும் யூதர்கள் அவ்வப்போது வெளியேற்றப்பட்டனர். இஸ்ரேல் என்ற ஒரு அரசு உருவாகும் வரை, அத்தகைய யூதர்களுக்கு பெரும்பாலும் செல்ல இடமில்லை.
உலகம் முழுவதும் சிதறிக்கிடந்த போதிலும், யூதர்கள் ஒருவரோடொருவர் மற்றும் இஸ்ரேல் தேசத்துடனும் இணைந்திருந்தனர், தொடர்ந்து இணைந்திருந்தனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீன் பிரச்சனையின் தொடக்கம்!
இஸ்ரேலின் தலைநகரமான ஜெருசலேம் மிகவும் பழமையானது. இது யூத, கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தினருக்கு முக்கியமான பகுதியாக விளங்கியது.
யூதர்களை பொறுத்தவரை இந்த பகுதி அவர்களுடைய பூர்வீக மண்ணாக இருக்கிறது. பாலஸ்த்தீனர்களை பொறுத்தவரையில் இது அவர்களது நிலம் என கோரி, யூதர்களை குடியேற்றம் செய்வதை எதிர்த்தனர்.
1920 முதல் 1940 வரை பாலத்தீன பகுதியில் யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதற்கு காரணம். ஐரோப்பாவில் அவர்களுக்கு நடந்த கொடுமைகள். குறிப்பாக ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் அதிக பிரச்சனைகளை யூத மக்கள் அனுபவித்தனர்.
ஹிட்லர் யூதர்களை படுகொலை செய்ய சபதமெடுத்தார். 2ம் உலகப்போரின் போது இனப்படுகொலைகளில் இருந்து தப்பியோடிய யூதர்கள் சிலர் இங்கே தஞ்சமடைந்தனர்.
அப்போது பாலஸ்த்தீனத்தில் யூதர்களுக்கும், பாலஸ்த்தீனர்களுக்கும் இடையே வன்முறை அதிகமானது. அதே நேரம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவும் கோபம் எழுந்தது.
1947ம் ஆண்டு பிரிட்டன் பாலஸ்த்தீனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது. அப்போது பாலஸ்த்தீனத்தை இரண்டாக பிரித்து யூதர்களுக்கு ஒரு நாடும், பாலஸ்த்தீனர்களுக்கு ஒரு நாடும் தோற்றுவிக்கவும், இரு சமூகத்துக்கும் புனித நகரமாக கருதப்படும் ஜெருசலேமை சர்வதேச நகரமாக மாற்றவும் ஐநா ஆதரவளித்தது.
இந்த திட்டத்தை யூத தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் தங்கள் நிலத்தை அவர்களுக்கு ஏன் பங்கிட வேண்டும் என பாலஸ்த்தீனர்கள் நிராகரித்தனர்.
தொடங்கிய யுத்தம்!
இந்த பிரச்னையை தீர்க்க முடியாத பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், 1948ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினர். அதனை தொடர்ந்து, 1948-ம் ஆண்டு மே 14ம் தேதி யூத தலைவர்கள் இஸ்ரேல் எனும் தனி நாடு தோற்றுவிக்கப்பட்டதாக அறிவித்தனர்.
அன்றைய தினமே அப்போதைய அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமேன் இஸ்ரேலை தனி நாடக அங்கீகரித்து அறிவிப்பை வெளியிட்டார்.