பிரபு தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார்.
சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளார். தலைவலி மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், நடு மூளை தமனியில் பிளவு பகுதியில் வீக்கம் (அனியூரிசம்) இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த பிரபு, உடல் நிலை சீராக உள்ளதால், இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
68 வயதான பிரபு, 1982 ஆம் ஆண்டு ‘சங்கிலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள அவர், சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ளார்.
அவரது உடல் நல பிரச்சனை குறித்து அறிந்த ரசிகர்கள், சமூக ஊடகங்களில் விரைவாக குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.