நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். விஜயகாந்தின் உடல் அவரது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் மக்கள் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு அன்னதான உணவும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜயகாந்த் மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார். இவரின் உதவி பட்டியலில் முதலில் இருப்பது அனைவருக்கும் சமபந்தி உணவு இந்த முறையை சினிமாவில் இருந்தது முதல் அரசியல் காலம் வரை அனைத்திலும் நடிகர் விஜயகாந்த் தொடர்ந்து செய்து வந்த செயல்.
தற்பொழுது அவரது குடும்பத்தினர் விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கும் செயலை தொடர்ந்து செய்து வருகின்றனர். விஜயகாந்தின் மீது கொண்ட அதீத அன்பு மற்றும் மரியாதை காரணமாக விஜயகாந்த் இறந்தும் அவர் நினைவிடத்திற்கு மக்கள் தினமும் அஞ்சலி செலுத்துவதற்காக வந்த வண்ணம் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து மறைந்த நடிகரும் தேமுதிக தலைவரும் ஆன விஜயகாந்த் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு அவர் இறந்து 125 நாட்களில் 15 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகிலேயே பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவிடமாக கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் போற்றப்படுகிறது.