அணுசக்திக்கு எதிரான தேசிய இயக்கங்களின் கூட்டமைப்பு (NAAM), இந்திய அரசின் அணுசக்தி சட்டங்களில் செய்யப்படவுள்ள திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு?
இந்திய ஒன்றிய அரசு, அணுசக்தி சட்டம் 1962, அணுவிபத்து இழப்பீடுச் சட்டம் 2010 ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகள் கட்டடம் மற்றும் மேம்பாட்டு பணிகளில் பங்கேற்கவும், அணுசக்தித் துறைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் வழிவகை செய்யப்படுகிறது.
இதில், அணு சக்தி சட்டம் 1962 மற்றும் அணுவிபத்து இழப்பீடுச் சட்டம் 2010 ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்யும் முயற்சிகள், நாட்டில் தனியார் நிறுவனங்கள் அணு உலைகளில் நேரடி பங்குபெற அனுமதிக்கப்படும் வகையில் இருப்பதாக அணுசக்திக்கு எதிரான தேசிய இயக்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அணு விபத்துகள் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரக்கூடிய ஒரு முறைமையை அணுவிபத்து இழப்பீடுச் சட்டம் 2010 வழங்குகிறது. மேலும், இந்தியாவில் அணுசக்தி நஷ்டங்களை கையாள ஒரு தெளிவான சட்டத் தளத்தையும் உருவாக்குகிறது.
இருப்பினும், அணுவிபத்து இழப்பீடுச் சட்டம் 2010, தனியார் நிறுவனங்களை, சாதனங்கள் வழங்குநராக மட்டுமின்றி நேரடி இயக்குநராக (operator) செயற்பட அனுமதிக்கிறது என்பது மிகுந்த ஆபத்தானது என இந்த கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
மேலும், இச்சட்டம் அனைத்து நஷ்ட ஈடுக்கும் இயக்குநர் மட்டுமே பொறுப்பாளியாக இருப்பதை எச்சரிக்கிறது. ஒப்பந்தம் இல்லையெனில் தயாரிப்பாளரிடம் நஷ்ட ஈடு கேட்க இயலாத நிலை உருவாகும். இதனால், தயாரிப்பாளர் பொறுப்பு என்பது பெயருக்கு மட்டும் என்றும், மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் வரி பணத்தில்தான் நஷ்ட ஈடு!
இந்திய அணுமின் கழகம்(NPCIL) தற்போது நாடு முழுவதும் அணு உலைகளை இயக்கி வருகிறது. இது ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால், மக்களுக்கு செலுத்தப்படும் நஷ்ட ஈடு, வரி செலுத்தும் மக்களின் பணத்தில் இருந்து செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
460 மில்லியன் டாலர் உச்சவரம்பு – போபால் பேரழிவை விட குறைவு?
போபால் வாயு பேரழிவில், 1989-இல் வழங்கப்பட்ட 470 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடையும், தற்போதைய 460 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு உச்ச வரம்பையும் ஒப்பிடும்போது, இது ஒரு அவமதிப்பாகும் எனவும், பெரிய அணு விபத்துகள் இதைவிட மோசமாக இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
அதேபோல், இயக்குநரின் பொறுப்பு ரூ.1,500 கோடிகளாகவும், பழைய எரிபொருள் மீள்சேர்க்கை நிலைய விபத்துகளுக்கு ரூ.300 கோடிகளாக குறைக்கப்படலாம் எனும் திட்டமும், தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுமக்களுக்கு பாதகமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது, பாதுகாப்பு மேம்பாட்டை கடந்து லாப நோக்கில் செயல்பட வாய்ப்பளிக்கிறது.
தனி நலனுக்கு மக்களே விலையா?
இதற்கு பதிலளிக்கும் வகையில், மாற்றுச் சட்டங்களை நிறைவேற்றும் முயற்சிகள் மக்கள் உரிமைகளை அழிக்கின்றன என்றும், Article 21-ன் படி உயிர்வாழும் உரிமையை மீறுகின்றன என்றும், பொது ஆலோசனைகள் இல்லாமல், இந்தச் சட்டங்களை மாற்றுவது மிகவும் கவலையூட்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த சட்ட மாற்றங்களை முற்றிலும் எதிர்த்து, மக்கள் நலனுக்காகவே சட்டங்களை நிலைநிறுத்த வேண்டும் என்று எம்.பிக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் அணுசக்திக்கு எதிரான தேசிய இயக்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.