நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் சிஎஸ்கே அணி தற்போது 8 போட்டிகளில் தோல்வியை தழுவி முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறுகிறது. இதன் மூலம் நான்கு புள்ளிகள் உடன் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
CSK பேட்டர்களை பந்தாடிய சஹல்
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் ஷேக் ரசித் 11 ரன்களிலும், ஆயுஸ் மாத்ரே 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஜடேஜா 12 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி பவர் ப்ளே முடிவில் 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதனை அடுத்து 4வது விக்கெட் ஜோடி சேர்ந்த பிரெவிஸ் மற்றும் சாம் கரண் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக சாம் கரண் 47 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக பஞ்சாப் வீரர் சஹல் கடைசி கட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்த சிஎஸ்கே அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி எளிதாக இலக்கை எட்டி போட்டியை வென்றது.
முதல் அணியாக வெளியேறும் CSK
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மைதானத்திலேயே ஒரு சீசனில் அதிக தோல்விகளை சந்தித்துள்ளது CSK. 2025- 5 தோல்விகள், 2008- 4 தோல்விகள், 2012- 4 தோல்விகள்.
தொடர் தோல்விகளால் நடப்பு ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 2வது ஆண்டாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுகிறது.
தோல்விக்கு காரணம்- மனம் திறந்த தோனி
நேற்றைய போட்டிக்குப்பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, “இந்த சீசனில் முதல் முறையாக CSK அணி தரப்பில் சிறந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அது சராசரிக்கும் குறைவாக இருந்ததாகவே பார்க்கிறேன். இன்னும் கொஞ்ச ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். கடைசி நேரத்தில் 4 விக்கெட்கள் இழந்ததால், கடைசி ஓவரில் ஆல் அவுட் ஆகி 4 பந்துகளை எதிர்கொள்ள முடியாமலும் போனது. இது போன்ற நெருக்கமான போட்டிகளில் இவை நிறைய அர்த்தங்கள் கொண்டவை” என்றார்.
சாம் கரன் ஒரு Fighter
“சாம் கரன் ஒரு Fighter என நம் அனைவருக்கும் தெரியும், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நல்ல பங்களிப்பைத் தருவார். அவருக்கு மெதுவான பிட்ச்களில் வாய்ப்பளித்ததால் விளையாட கடினமாக இருந்தது. இன்றுதான் சொந்த மைதானத்தில் சிறந்த பிட்ச்-ஐ பெற்றுள்ளோம்” என்று தோனி கூறினார்.
எதிர்கால சொத்து பிரெவிஸ்
“பிரெவிஸ் மிடில் ஆர்டரில் சிறந்த பங்களிப்பை தருகிறார். நல்ல ஃபீல்டர், அவரிடம் அதிக பவர் இருக்கிறது, ஃபீல்டிங்கில் எனர்ஜியோடு இருக்கிறார். இதுபோன்ற வீரர்கள்தான் CSK-க்கு தேவை. வரும் காலங்களில் டெவால்ட் பிரெவிஸ் மிகப்பெரிய சொத்தாக இருப்பார்” என்று பிரெவிஸுக்கு தோனி புகழாரம் சூட்டினார்.
தோனி ஓய்வு?
நேற்றைய போட்டியில் டாஸ் நிகழ்வின் போது சென்னை அணி கேப்டன் தோனியிடம் அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா என வர்ணனையாளர் டேனி மோரிஸ் கேள்வி எழுப்பினார். அடுத்த போட்டிக்கே திரும்ப வருவேனா என்று எனக்கு தெரியாது என தோனி சிரித்தவாறு கூறினார். இதனால் தோனி ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெற போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.