நடப்பு IPL தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அபார வெற்றி பெற்ற RCB
LSG-க்கு எதிரான நேற்றைய போட்டியில், RCB அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த LSG, 20 ஓவர்களில் 227 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பண்ட் 118 ரன்களை விளாசினார். அடுத்து களமிறங்கிய RCB, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. கேப்டன் ஜிதேஷ் ஷர்மா 85(33) ரன்களை விளாசி ருத்ரதாண்டவம் ஆட, 18.4 ஓவர்களில் 230 ரன்களை எடுத்து வென்றது. இதன்மூலம், RCB புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியது.
சாதனை மேல் சாதனை படைக்கும் கோலி
பழைய சாதனைகளை உடைப்பதும், புதிய சாதனைகளை படைப்பதுமே விராட் கோலியின் வேலை. அந்த வகையில் IPL-ல் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை RCB வீரர் விராட் கோலி(63) படைத்துள்ளார். லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 27 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்த சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் டேவிட் வார்னர்(62) மற்றும் ஷிகர் தவான் (51) உள்ளனர்.
அதுமட்டுமின்றி, டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 9,000 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற அசத்தல் சாதனையையும் படைத்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி.
தோனியின் சாதனையை தகர்த்த ஜித்தேஷ்
LSG-க்கு எதிரான நேற்றைய போட்டியில், RCB கேப்டன் ஜிதேஷ் ஷர்மா 33 பந்துகளில் 85 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் தோனியின் 18 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்துள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் சேஸிங்கின் போது 6 அல்லது அதற்கும் கீழ் இறங்கி அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார். தோனி, ரசல், பொல்லார்டு 70 ரன்களுடன் 2-ம் இடத்தில் உள்ளனர்.
IPL வரலாற்றில் பெயர் பொறித்த RCB
ஒரு ஐபிஎல் சீசனில் வெளியூர்களில் நடந்த அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை RCB படைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா, சென்னை, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளின் சொந்த மண்ணில் RCB வெற்றி வாகை சூடியுள்ளது.
கேப்டன் ஜித்தேஷ் உத்வேகம்
இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற கேப்டன் ஜித்தேஷ், “விராட் கோலி ஆட்டமிழந்ததும், கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதுதான் மனதில் தோன்றியது. எனது குரு, வழிகாட்டி தினேஷ் கார்த்திக் அண்ணா அதைதான் என்னிடம் தொடர்ந்து கூறுவார். ‘உன்னால் முடியும். எந்த ஒரு சூழலாக இருந்தாலும் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் சக்தி உன்னிடம் உள்ளது’ என DK என்னை ஊக்கப்படுத்தி வந்தார்” என்று தெரிவித்தார்.
பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை RCB வீழ்த்துமா?
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிஃபையர் 1 சுற்றில் நாளை(மே 29) மோதுகிறது. மே 30ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் குஜராத், மும்பை அணிகள் மோதவுள்ளன.
குவாலிஃபையர் 1 சுற்றில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு RCB அணி முன்னேறுமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.