சிஎஸ்கே அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் சதம் விளாசிய பஞ்சாப் அணியின் இளம் வீரர் பிரியான்ஸ் ஆர்யா கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளார். இவரது அதிரடியான ஆட்டமே நேற்று பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கு வழிவகுத்தது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. 220 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் மட்டுமே குவித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் வீரர்களின் கேட்ச்களை பலமுறை தவறவிட்டதே சென்னை அணிக்கு பின்னடைவை தந்தது. குறிப்பாக சதம் விளாசிய பஞ்சாப் வீரர் பிரியான்ஸ் ஆர்யாவின் கேட்சை சென்னை வீரர்கள் சுமார் 3 முறை தவறவிட்டனர். இது பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
பஞ்சாப் அணியின் வரலாறு
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் என்ற ஒரு அணி இருக்கிறதா என்று கேட்கும் அளவிற்கு அந்த அணி மோசமான செயல்திறனையே கொண்டிருந்தது. இதுவரை நடந்த 17 சீசன்களில் ஒரே ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது, அதுதவிர 2008ல் மட்டுமே அரையிறுதிவரை முன்னேறியது. மற்ற சீசன்களில் ஒருமுறை கூட பிளே ஆஃப்க்கு தகுதி பெறாத அணியாக இருந்து வந்தது. அப்படி இருக்கையில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான நடப்பு சீசன் பஞ்சாப் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 3 வெற்றிகள், 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், இந்த முறை பஞ்சாப் அணிக்காக அதை செய்வாரா என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
39 பந்தில் சதம் விளாசிய இளம் வீரர்
பஞ்சாப் அணியில் ஸ்ரேயஸ் ஐயர், ஜோஸ் இங்கிலீஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மேக்ஸ்வெல், பிரப்சிம்ரன் சிங், ஷஷாங் சிங், யுஸ்வேந்திர சஹல் போன்ற அதிரடி வீரர்கள் காணப்பட்டாலும், 24 வயதேயான இளம் வீரர் பிரியான்ஸ் ஆர்யா ஒரே போட்டியில் தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
அவர் சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 9 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் என சிஎஸ்கே பவுலர்களுக்கு வானவேடிக்கை காட்டி 42 பந்துகளில் 103 ரன்கள் குவித்து அசத்தினார். 39 பந்துகளிலேயே தனது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
யார் இந்த பிரியான்ஸ் ஆர்யா?
பிரியான்ஸ் ஆர்யா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். இவர் 2024 டெல்லி பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கி தனது அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். அந்த தொடரில் மட்டும் 2 சதங்கள் விளாசியிருந்தார். அதன்பின், சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய ஆர்யா, வடக்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் பந்து வீச்சாளர் மனன் பரத்வாஜுக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் பறக்கவிட்டு தனது அதீத திறமையை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி, சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் விளையாடிய பிரியான்ஸ் 176 ஸ்ட்ரைக் ரேட்டில் 325 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
விராட் கோலியை ஐடலாக கொண்டவர்
டெல்லியைச் சேர்ந்த பிரியான்ஸ் அதே டெல்லி மண்ணைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியை ஐடலாக கொண்டவர். இதை அவரே ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ஐபிஎல்-ல் விராட் கோலி இருக்கும் ஆர்சிபி அணிக்காக, தான் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின்போது ஆர்சிபி அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது. ஆனால் இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ரூ.3.8 கோடிக்கு வாங்கியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சிறந்த கண்டுபிடிப்பாக திகழும் பிரியான்ஸ் ஆர்யா, அடுத்தடுத்து தனது திறமைகளை வெளிப்படுத்தி இந்திய அணிக்காகவும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.