இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (101) சதம் அடித்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். ராகுல் (42) ரன்கள் அடிக்க, சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின் கேப்டன் கில் (127) சதம் அடிக்க, துணை கேப்டன் பண்ட்(65) அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 359/3 ரன்களை குவித்தது.
இந்தியா டாஸில் தோற்றிருந்தாலும் பேட்டிங்கில் மாஸ் காட்டி வருகிறது.
அறிமுக போட்டியிலேயே டக் அவுட்
பிரைடன் கார்ஸ் வீசிய 25-வது ஓவரில் ராகுல் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்த ஓவரிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் வந்த வேகத்தில் (அறிமுக போட்டி) 0 ரன்னுக்கு நடையை கட்டினார்.
முதல் டெஸ்டிலேயே தடம் பதித்த கில்
இந்திய கேப்டனாக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த 5-வது வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கும் முன் விஜய் ஹசாரே (1951), சுனில் கவாஸ்கர் (1976), வெங்சர்க்கார் (1987) மற்றும் விராட் கோலி (2014) ஆகியோர் இந்த சாதனையை பதிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் சாதித்த ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால் 159 பந்துகளில் 16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 101 ரன்களை விளாசினார். இதன் மூலம், ENG-ல் விளையாடிய முதல் டெஸ்ட் மேட்ச்சிலேயே சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் அவர் இணைந்துள்ளார். இதற்கு முன்னர், முரளி விஜய் (2014), சவுரவ் கங்குலி (1996), சந்தீப் பாட்டில் (1982), விஜய் மஞ்ச்ரேக்கர் (1951) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
ரிஷப் பண்ட்டின் அசத்தல் சாதனை
இந்த போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் (76 Inn) 3,000 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட். இதற்கு முன் 144 இன்னிங்ஸில் எம்.எஸ்.தோனி 3,000 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாத குறையே தெரியாமல் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி அசத்தி வருகிறது.