TNPL தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வீழ்த்தியது.
சேலத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் ஆல்ரவுண்டர் ராஜ்குமார் அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்கவே அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. அவர் 24 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 58 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து சொதப்பும் கோவை கிங்ஸ்
இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே லைகா கோவை கிங்ஸ் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. 169 என்ற கடின இலக்கை துரத்திய லைகா கோவை கிங்ஸ் அணி இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று முதல் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருச்சியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்தப் போட்டியிலும் தோல்வியையே தழுவியது.
கேப்டன் சொதப்பல்
கேப்டன் ஷாருக்கான் 2 ரன்னிலும், குரு ராகவேந்திரன் 7 ரன்னிலும், தொடக்க வீரர்களான ஜிதேந்திர குமார் 7 ரன்னிலும், சுரேஷ் லோகேஷ்வர் 11 ரன்னிலும் நடையை கட்டினர். ஆண்ட்ரே சித்தார்த் மட்டும் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். மாதவ பிரசாத் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பவுலிங்கில் கலக்கிய திருச்சி
திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் அதிசயராஜ் டேவிட்சன் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட்டிங்கில் அரைசதம் அடித்த ராஜ்குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஈஸ்வரன் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
கடைசி இடத்தில் கோவை
கடந்த ஆண்டு 2ஆவது இடம் பிடித்த லைகா கோவை கிங்ஸ், நடப்பு தொடரில் விளையாடிய 4 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.