சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று(ஏப்.11) நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணி இந்த சீசனில் மட்டும் 5 தொடர் தோல்விகளை பதிவு செய்து மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ரசிகர்களுக்கு ஏமாற்றம்
சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இந்த சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக மீண்டும் தோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே 4 தொடர் தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணி தோனி கேப்டன்ஷிப்பில் கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தோனி தலைமையில் நடந்த நேற்றைய போட்டியிலும் சிஎஸ்கே அணி தோற்றதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சிஎஸ்கே வீரர்கள் சொதப்பல்
சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் ருதுராஜ்க்கு பதிலாக திரிபாதியும், முகேஷ் சவுதிரிக்கு பதிலாக அன்சுல் கம்போஜ்-ம் சேர்க்கப்பட்டனர்.
சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா – டெவான் கன்வே களமிறங்கினர். கம்பேக் கொடுக்கும் என்று நினைத்த சிஎஸ்கே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. 72 ரன்களுக்கு சிஎஸ்கே 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் 9வது வீரராக கேப்டன் தோனி களமிறங்கினார். தோனி ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகளையாவது அடித்து ஆறுதல் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 1 ரன் மட்டுமே எடுத்து சுனில் நரைன் பந்துவீச்சில் அவுட்டாகினார். இந்த போட்டியில் ஒரே ஒரு சிக்ஸரும், 8 பவுண்டரிகள் மட்டுமே சிஎஸ்கே அடித்தது. இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை போராடி குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணி சிஎஸ்கே பவுலர்களை பந்தாடி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 10.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
ஒரே போட்டியில் மோசமான சாதனைகள்
1. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி 5 தொடர் தோல்விகளை சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.
2. முதல்முறையாக சேப்பாக்கத்தில் 3 போட்டிகளில்
தொடர்ந்து தோல்வி.
3. முதல்முறையாக சேப்பாக்கத்தில் மிகக்குறைவான (103) ஸ்கோரை பதிவுசெய்தது.
4. ஐபிஎல் வரலாற்றில் தனது 3வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
5. சிஎஸ்கே முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
6. கேகேஆர் அணியிடம் நேற்று தோற்றது தான் பந்துகளின் அடிப்படையில் சிஎஸ்கேவின் மிகப்பெரிய தோல்வி. அதாவது, மொத்தம் 59 பந்துகள் மிச்சம் வைத்து கேகேஆர், சிஎஸ்கேவை மண்ணைக்கவ்வ வைத்தது. இதற்கு முன், 2020ல் மும்பை அணி, 46 பந்துகளை மிச்சம் வைத்து தோற்கடித்தே சிஎஸ்கேவின் மோசமான ரெக்கார்டாக இருந்தது.
மரம் நடும் சிஎஸ்கே
சிஎஸ்கே தோற்றாலும் தமிழ்நாட்டிற்கு ஒரு நன்மை செய்துள்ளது. நேற்றைய போட்டியில் மட்டும், மொத்தமாக 51 Dot balls விளையாடி, மொத்தம் 25,500 மரங்களை நட உதவியுள்ளது. மக்கள் நலனில் அக்கறை காட்டும் சிஎஸ்கேவின் எண்ணத்தை பாராட்டலாமே என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.
தோனிக்கு ரசிகர்கள் கேள்வி
அணி ரன் இல்லாமல் தவிக்கும்போது அஸ்வின், தீபக் ஹூடா இறங்கியப்பிறகே, 9வது விக்கெட்டுக்கு களமிறங்குகிறார் அதிரடி பேட்ஸ்மேன் தோனி. எனவே, “இது மோசமில்லையா? ஃபார்மில் இல்லாத வீரரும், பவுலரும் ஏன் அவருக்கு முன்னாடி இறங்கணும். ஏன் இப்படி செய்கிறார் தோனி?” என சிஎஸ்கே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தோல்விக்குப் பிறகு தோனி கூறியவை
கேகேஆர் அணிக்கு எதிரான தோல்விக்குப்பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, “கடந்த சில போட்டிகளாக எதுவுமே எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்தப் போட்டியில் நாங்கள் போதுமான ரன்கள் சேர்க்கவில்லை. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. எங்களிடம் நல்ல தொடக்க வீரர்கள் உள்ளனர். ஸ்கோரை பார்த்து விரக்தி அடையாமல் இருப்பது மிகவும் முக்கியம். மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை” என்று கூறினார்.
மைக் ஹசி நம்பிக்கை
சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, “நடப்பு சீசனில் நாங்கள் இன்னமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறோம். எனினும் ஒரு வெற்றி எங்களது மனநிலையை முற்றிலும் மாற்றிவிடும் என நம்புகிறேன். அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு விரைவில் வாய்ப்புகள் வழங்கப்படும். ப்ளே ஆஃப் சுற்றை எட்டிப் பிடிப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதை செய்ய முடியும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
ப்ளே ஆஃப்-க்கு வாய்ப்பு இருக்கா?
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி ப்ளே ஆஃப்-க்கு தகுதி பெற வேண்டுமென்றால் இனி விளையாடவுள்ள 8 போட்டிகளில் 7ல் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதுவும் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 1 மட்டுமே வென்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.