உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதி வருகின்றன. இந்த டெஸ்ட் தொடரில் 69.44 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா முதல் இடத்தையும், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 67.54 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இந்திய அணி 50 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்தது.
பந்துவீச்சில் கலக்கிய தென்னாப்பிரிக்கா
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில், இந்த இறுதிப்போட்டி நேற்று(ஜூன் 11) தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆஸி வீரர்கள் திணறினர். அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் விளாசினர். அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் 11 ரன்களும், கேமரன் கிரீன் 4 ரன்களும், ஓப்பனர் கவாஜா டக் அவுட்டாகியும் அதிர்ச்சி அளித்தனர்.
முதல்நாள் முடிவில் ஆஸி ஆதிக்கம்
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். ஓப்பனர் மார்க்ரம் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் ரிக்கெல்டன் 16 ரன்கள், மல்டர் 6 ரன்கள், ஸ்டப்ஸ் 2 ரன்கள் மட்டுமே குவித்து அடுத்தடுத்து வெளியேறினர். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் பந்துவீச்சில் மிரட்டி தென்னாப்பிரிக்க அணியை திக்குமுக்காடச் செய்தனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆஸ்திரேலியாவை விட 169 ரன்கள் பின்தங்கியுள்ளது.
மீண்டு வருமா தென்னாப்பிரிக்கா?
இந்நிலையில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் அடுத்து உள்ள பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு மீட்பரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.