இந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் 29வது போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று(ஏப்.13) நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பேட்டிங்கில் அதிரடி காட்டிய மும்பை
முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 33 பந்துகளில் 59 ரன்களை குவித்தார். அதே போன்று ரியான் ரிக்கல்டன் 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். மேலும் சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 40 ரன்களையும் குவித்தார். எனவே டெல்லி அணி வெற்றி பெற 206 ரன்களை மும்பை அணி இலக்காக நிர்ணயித்தது.
போராடி தோற்ற டெல்லி அணி
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. ஆகையால் டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. மும்பை அணி வீரர் கர்ண் சர்மா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மாஸ் காட்டிய மும்பை அணி
இந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியையே சந்திக்காமல் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், யாரும் அசைக்க முடியாத டெல்லி அணியை மும்பை வீழ்த்தி வெற்றியை ருசித்துள்ளது. மும்பை அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில், பலம் வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்தி மொரட்டுத்தனமான கம்பேக் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் புள்ளிப் பட்டியலிலும் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திலிருந்து 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.