ஐபிஎல்-ஐ பொருத்தவரை திறமையான இளம் வீரர்களை கண்டெடுத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கியப்பங்குண்டு. அந்த வகையில் நேற்று(மார்ச் 31) நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தனது அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய மும்பை அணி வீரர் அஸ்வனி குமார் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
வரலாற்று சாதனை
மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி மும்பை அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே குவித்தது. குறிப்பாக மும்பை அணி வீரர் அஸ்வனி குமார் ரஹானே, ரிங்கு சிங், ரசல், மணீஷ் பாண்டே ஆகிய முக்கிய நபர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பௌலர் என்ற சாதனையை படைத்தார் 23 வயதேயான அஸ்வனி குமார்.
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் தனது அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய 10வது பந்துவீச்சாளர் என்ற அசாத்திய சாதனையையும் இவர் படைத்துள்ளார். அவரது அபாரமான ஆட்டத்தை பாராட்டி ‘ஆட்ட நாயகன்’விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவருக்கு சிறந்த பந்துவீச்சாளருக்கான பேட்ஜை வழங்கி கேப்டன் ஹர்திக் பாண்டியா கௌரவித்தார்.
மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச (24) வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது மும்பை அணி.
யார் இந்த அஸ்வனி குமார்?
அஸ்வனி குமார், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். பள்ளியில் மாவட்ட அளவில் விளையாடியபோது, அவரது வேகமும், பந்தை ஸ்விங் செய்யும் திறனும் கவனத்தை ஈர்த்தன. 15 வயதில், பஞ்சாப் Under-19 அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். பயிற்சிக்கு செல்ல பணம் இல்லாததால், சில நேரங்களில் நண்பர்களிடம் கடன் வாங்கியும், பேருந்தில் பயணித்தும் அவர் மைதானத்திற்கு சென்றுள்ளார். பின், 2019ல் முதல் முறையாக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். அங்கு, தனது முதல் சீசனிலேயே 20 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது திறமையை நிரூபித்தார். அதைத் தொடர்ந்து உள்ளூர் டி20 போட்டிகளிலும் அஸ்வனி பங்கேற்றார். இதன்மூலம் கவனம் பெற்ற அவர், தற்போது 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமாகி கலக்கி வருகிறார்.
நம்பிக்கை நட்சத்திரம்
அஸ்வனி குமாரின் இந்த அறிமுக ஆட்டம், அவரது கிரிக்கெட் பயணத்தில் மாபெரும் தொடக்கமாக அமைந்துள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் இவர், இப்படியே அதிரடியாக விளையாடினால் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “எங்கள் அணி நிர்வாகம் நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று திறமைவாய்ந்த இளம் வீரர்களை கண்டெடுத்துள்ளனர்” என்று பெருமிதம் தெரிவித்தார். இந்த ஆண்டு மும்பை அணியில் அறிமுகமான கேரளாவைச் சேர்ந்த விக்னேஷ் புத்தூரும் சிஎஸ்கேவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.