கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தும் தோல்வியைத் தழுவியது.
கொல்கத்தா அணியின் அசத்தலான ஆட்டம்
நடப்பு ஐபிஎல் தொடரின் 48வது போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று(ஏப்.29) நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா வீரர்கள் குர்பாஸ், சுனீல் நரேன் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். இளம் வீரர்கள் ரகுவன்ஷி 44 ரன்களும், ரிங்கு சிங்கு 36 ரன்களும் சேர்க்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடிய டெல்லி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டூ பிளசி அதிகபட்சமாக 62 ரன்களும், கேப்டன் அக்சர் படேல் 38 ரன்களும் சேர்த்தனர். 18வது ஓவரை வீசிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்களை வீழ்த்தி, டெல்லியின் வெற்றியை தடுத்து நிறுத்தினார். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்து டெல்லி அணி தோல்வியடைந்தது.
ஸ்டார்க் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்
KKR இன்னிங்ஸின் 20 வது ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. டெல்லி வீரர் ஸ்டார்க் வீசிய 3-வது பந்தில், ரோவ்மேன் பாவெல் LBW முறையில் அவுட்டாகினார். 4-வது பந்தில், அனுகுல் ராய் துஷ்மந்தா சமீராவிடம் கேட்ச் கொடுத்து யெளியேறினார். இதனையடுத்து, ரானா டிரைவ் ஷாட் ஆட, Non-Striker ஆன்ட்ரே ரசல், கடைசியில் ரன் அவுட்டாகினார். இது தனிநபர் ஹாட்ரிக் இல்லை என்ற போதிலும், டெல்லி அணி “டீம் ஹாட்ரிக்”-ஐ நிகழ்த்தியது.
ஸ்டார்க் இவ்வளவு போராடி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தும் டெல்லி அணி தோல்வியைத் தழுவியது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த டெல்லி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது, அதேநேரத்தில் கொல்கத்தா அணி 7வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. எனினும் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.