ஐபிஎல் தொடர் வரலாற்றில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்துள்ளார் குஜராத் வீரர் முகமது சிராஜ். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பல வருடங்களாக ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த சிராஜ் இந்த ஆண்டு ஆர்சிபி அணியால் விடுவிக்கப்பட்ட நிலையில், குஜராத் அணி அவரை வாங்கியது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி 2வது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
ஆர்சிபி அணிக்காக 87 போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ், ஒரு முறை மட்டுமே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். தற்போது குஜராத் அணியில் இணைந்த 4வது போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
சிராஜின் சிறப்பான பந்துவீச்சு
ஹைதராபாத்தில் நேற்று(ஏப்.6) நடைபெற்ற 19வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ்குமார் ரெட்டி 31 ரன்னும், கிளாசன் 27 ரன்னும், கம்மின்ஸ் 22 ரன்னும் எடுத்தனர். குஜராத் சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அதுவும் முதல் ஓவரிலேயே சிராஜ் விக்கெட் எடுத்தது அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அவர் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்தார்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சுப்மன் கில் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 49 ரன்னில் அவுட்டானார். ரதர்போர்டு 16 பந்தில் 35 ரன்கள் குவித்தார். இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3வது வெற்றியைப் பதிவு செய்தது.
ஆட்டநாயகன் சிராஜ்
இந்த போட்டியில் வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குஜராத் வீரர் சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிராக நடந்த கடந்த போட்டியிலும் கூட சிராஜ் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில், ஆர்சிபி அணியில் இருக்கும்போது கூட சிராஜ் இவ்வாளவு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை என ஆர்சிபி ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.