SRH மற்றும் DC அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று(மார்ச் 30) விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற SRH அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வழக்கமாக SRH அணி என்றாலே மிக எளிதாக 200க்கும் அதிகமான ரன்களை இலக்காக நிர்ணயிப்பர். ஆனால் இந்த போட்டியில் டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் SRH வீரர்கள் திணறினர். 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே குவித்தனர். குறிப்பாக டெல்லி அணியின் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
SRH அணியை காப்பாற்றிய அனிகெட் வெர்மா
SRH அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 5வதாக களமிறங்கிய அனிகெட் வெர்மா 41 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்ஸர் விளாசி 74 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் SRH அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் மோசமான நிலைமையில் இருந்த அணியை காப்பாற்றிய அனிகெட் பேசுபொருளாகியுள்ளார்.
யார் இந்த அனிகெட் வெர்மா?
23 வயதே ஆன அனிகெட் வெர்மா உத்திரப்பிரதேசம் மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர். இவர் வலது கை பேட்டிங் மற்றும் வலது கை வேகப்பந்துவீச்சாளராக உள்ளார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் SRH அணி இவரை வெறும் 30 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வாங்கியது.
2024ல் 23 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் அறிமுகமான இவர் மத்திய பிரதேசம் அணிக்காக ஆடி 75 பந்துகளில் 101 ரன்களை விளாசினார். மத்திய பிரதேச பிரீமியர் லீக் போட்டியில் 244 ரன்கள் எடுத்தார். அந்த தொடரில் ஸ்ட்ரைக் ரேட் 205 ஆக வைத்திருந்தார். மேலும் அத்தொடரில் அவர் ஒரு போட்டியில் 41 பந்துகளில் 13 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் குவித்திருந்தார்.
பின் சீனியர் கிரிக்கெட்டில் சையத் முஷ்டக் அலி தொடரில் அறிமுகமானார். ஐதராபாத் அணிக்கு எதிராக அந்த தொடரில் அவர் தான் களமிறங்கிய முதல் போட்டியிலேயே டக் அவுட்டானார். அதைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்த அனிகெட் வெர்மா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தன்னுடைய ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த போட்டியில் அவர் 7 ரன்கள் மட்டுமே எடுத்து துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
புதிய நட்சத்திரமாக ஜொலிக்கும் அனிகெட்
நேற்றைய போட்டியில் அனிகெட் 74 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஐதராபாத் அணிக்காக 5வது வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையில் ஹென்ரிச் கிளாசன் 80 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி டெல்லி வீரர் அக்சர் படேல் வீசிய 15வது ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட அனிகெட், பந்தை 102 மீட்டர் தூரத்திற்கு பறக்கவிட்டு சிக்ஸர் விளாசினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய பந்துவீச்சாளரால் வீசப்பட்ட பந்தில் மிகப்பெரிய சிக்ஸர் விளாசியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். SRH அணியின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அனிகெட் வெர்மாவிடம் இருந்து மேலும் பல அதிரடியான ஆட்டங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.