ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் UEFA சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக கோப்பை வென்று பிஎஸ்ஜி அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வரலாற்று வெற்றி
ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் 36 அணிகள் மோதிய நிலையில், இறுதிப் போட்டிக்கு பிஎஸ்ஜி அணியும் இன்டர் மிலன் அணியும் தேர்வாகின. ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற அலையன்ஸ் அரினா திடலில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.
இப்போட்டியின் முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து அசத்திய பிஎஸ்ஜி அணி இரண்டாவது பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்தது. கடைசி வரை போராடிய இன்டர் மிலன் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 5 – 0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
சிறப்பாக ஆடிய புதிய வீரர்கள்
கடந்த காலங்களில் பிஎஸ்ஜி அணியில் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்வே ஆகியோரை பல கோடிகள் கொடுத்து எடுத்தும் பிஎஸ்ஜி அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது, புதிய வீரர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஓசுமானே டெம்பெல், டெசிரே நோன்கா-மஹோ, க்விச்சா க்வாரட்ஸ்கெலியா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இன்டர் மிலன் அணி கடந்த காலங்களில் அதாவது 1964, 1965, 2010 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக்கை வென்றிருந்தது. நான்காவது முறை கோப்பை வெல்ல வேண்டும் என்ற இன்டர் மிலன் அணியின் கனவை பிஎஸ்ஜி தகர்த்துள்ளது.