2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
மிரட்டிய பாட் கம்மின்ஸ்
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 212 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 138 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
218 ரன்கள் முன்னிலையில் ஆஸி
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் பந்துவீச்சை கணிக்க முடியாமல் 75 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் 61 ரன்களை சேர்த்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 200க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து தென்னாப்பிரிக்க அணி வெற்றியை சுவைக்குமா என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இன்னும் மூன்று நாட்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெறுவது ஆஸ்திரேலியாவா, தென்னாப்பிரிக்காவா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.