தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த மழையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக மழைபொழிவை பெறும்.
முதல்வர் ஆலோசனை
தென்மேற்கு பருவமழை பாதிப்புகளை எதிர்க்கொள்ளும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (மே 19) காலை 11 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி, வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உட்பட 8 அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் முருகானந்தம், வருவாய்த் துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கடந்த 4 ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு பல்வேறு பேரிடர்களை எதிர்கொண்டுள்ளோம். தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் கடலோர மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்திய முதல்வர், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றும் கடைமை அரசுக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பேரிடர் மீட்பு மையங்கள் அடிப்படை வசதியுடன் தயாராக இருக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், நிலச்சரிவு போன்றவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.