சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களையும் புரட்டிப்போடும் அளவிற்கு அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இந்த புயலின் தாக்கத்தின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் கடல் போல் காட்சி அளித்தது. இரண்டு நாட்களில் மழை ஓய்ந்த பிறகும் வெள்ள நீர் வடியாமல் இந்த நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
சென்னையில் எதிர்பாராத அளவிற்கு வெள்ளநீர் பல பகுதிகளில் மக்களின் எதிர்காலத்தையே புரட்டிப் போடும் அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று வரை மீளா துயரத்தில் இருந்து வருகின்றனர். சென்னையில் பல பகுதிகளில் மக்கள் இந்த மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழை சென்னை மக்களின் வாழ்வாதாரத்தையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இன்று வரை சென்னையின் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர் மேலும் பல பகுதிகளில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகள் என முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் சில பகுதிகள் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்ப தொடங்கியுள்ளது. இருந்த போதிலும் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதி கனமழையில் சிக்கிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அதிக அளவில் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. வாகனங்களை பழுது பார்ப்பதற்காக வாகன உரிமையாளர்கள் அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு இந்த மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் டி.வி.எஸ் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை மக்களுக்கு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள டி.வி. எஸ் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வாகனங்களை பழுது பார்த்த தரப்படும் என்ற ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்பொழுது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறும் விஷயமாக அமைந்துள்ளது. மேலும் இந்த சலுகை இன்று முதல் வருகின்ற 18 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் டி.வி. எஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ளனர்.