சமையலில் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தும் பூண்டு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தற்பொழுது பூண்டின் விலை ரூ. 420 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் வெளிமார்க்கெட்டில் பூண்டின் விலை கிலோ ரூ. 500 வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மருத்துவ குணமிக்க பூண்டு சமையலின் சுவையை கூட்டுவதற்கும் பெருமளவில் பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக நடுத்தர குடும்பத்தினர் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு வாங்குவதில் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். உற்பத்தியாளர்களிடமிருந்து பூண்டு அதிக அளவு கொள்முதல் செய்த பின்பு ஏற்படும் சில தட்டுப்பாடு காரணமாக பூண்டின் விலை தற்பொழுது அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பூண்டின் விலை ஒரு கிலோ ரூ. 50 க்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் பல மடங்காக அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பூண்டு அதிக அளவு ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், குஜராத் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகின்றன. ஒவ்வொரு பூண்டின் வகைகளை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்பொழுது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு மட்டும் அல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் சரமாரியாக அதிகரித்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.