செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் பகுதியில் 23 இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.இதை அடுத்து மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இப்பகுதியில் உள்ள இருளர் குடும்பத்தினருக்கு 2022 ஆம் ஆண்டு ,13 இருளர் குடும்பத்தினருக்கு அரசு தொகுப்பு வீடு கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, இதில் 12 இருளர் இன குடும்பத்தினரின் வீடுகள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது.
முருகன் என்பவரின் ஒரு வீடு மட்டும் கடந்த ஒரு ஆண்டு காலமாக தளம் அமைக்காமல் உள்ளது. இதற்குக் காரணம் இவர்களின் வீட்டின் அருகே மின்கம்பம் மற்றும் மின் ஒயர்கள் செல்வதால் வீடு தளம் அமைக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இதை அடுத்து மின்வாரிய அலுவலகத்தில் இந்த மின்கம்பத்தினை மாற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த மின்கம்பம் மற்றும் மின் ஒயர்களை இடம் மாற்ற ரூபாய் சுமார் 98.000 கேட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இருளர் இன மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே இருளர் இன மக்களின் நலன் கருதி தமிழக அரசும் ,மாவட்ட நிர்வாகமும் இப்பகுதியில் உள்ள மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அகற்றி அரசு வழங்கிய தொகுப்பு வீட்டினை கட்டித் தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.