தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இன்று பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மயிலாடுதுறை விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின் படி ஒரு சில பகுதிகளில் மிக கனமழை எச்சரிக்கை இருப்பதாகவும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்பொழுது வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் சில தகவலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அதி கனமழையானது டெல்டா மாவட்டங்கள் முதல் மகாபலிபுரம் வரை மையம் கொண்டிருந்ததாகவும் தற்பொழுது மேக கூட்டங்கள் விலகி மேல்நோக்கி நகர்ந்து கடலூர், பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகளை மையம் கொண்டுள்ளதால் தற்பொழுது டெல்டா மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருவதாகவும் சென்னையை பொருத்தவரை அதிக கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை அவ்வப்போது பெய்து வரும் என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.