சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 16 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், முன் ஏச்சரிக்கை நடவடிக்கைகளில் சென்னை நகர மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட இடமாக வேளச்சேரி பகுதியை கூறலாம். இதனால் தற்போது அந்த பகுதி மக்கள் தங்களது கார்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டி வேளச்சேரி மேம்பாலத்தின் இருபுறமும் தங்களது கார்களை நிறுத்தியுள்ளனர்.
வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள் அனைத்து கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாக மாறியது. இதனை தொடர்ந்து இது போன்று காரை நிருத்துவோருக்கு மாநகர போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “கனமழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க மேம்பாலங்கள் மீது நிறுத்தப்படும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவதாக வரும் தகவல் தவறானது. இதுவரை எந்த வாகனத்திற்கும் அதுபோல அபராதம் விதிக்க்கப்படவில்லை என்ற விளக்கமளித்துள்ளது.
மேலும் கனமழை நேரங்களில் மக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அணுகினால் சரியான வாகன நிறுத்தம் இடம் குறித்த தகவல் பகிரப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி தெற்கு மற்றும் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் 044 – 23452362 என்ற எண்ணிலும் வடக்கு, மேற்கு ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் 044 -23452330 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.