தமிழக அமைச்சரவை மாற்றம், புதிய அமைச்சர்கள் நியமனம் போன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி முதல் சுமார் 17 நாட்கள் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. அமைச்சரவையில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் உட்பட மூன்று பேர் மாற்றப்பட்டு புதியதாக மூன்று பேருக்கு இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பெரிய அளவில் இலாகா மாற்றம் இருக்கும் என்றும் அரசு வட்டாரங்களில் தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானாது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றமா என தகவல் வருகிறதே என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியதற்கு, ‘எனக்கு தகவல் வரவில்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது பதிலளித்துள்ளார். இதன் மூலம் பல்வேறு சர்ச்சைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பொதுவாக முதல்வர் இவ்வாறு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது முதல்வர் கண்காணிப்பில் இருக்கும் இலாக்காவற்றை வேறு அமைச்சர்களின் பொறுப்பிற்கு மாற்றுவது அல்லது அந்த இலாக்காவிற்கு புதிய அமைச்சர்களை நியமிப்பது போன்ற மாற்றங்கள் முன்னெடுக்கப்படும். இதனால் சில நாட்களுக்கு முன்பே அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் பதவி குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின.
அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், காந்தி ஆகியோரது செயல்பாடுகளில் முதல்வர் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால் இவர்களை நீக்கிவிட்டு புதியதாக அமைச்சர்களை நியமிப்பதாகவும் மேலும் அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகிறார் என்றும் இதனால் சில இலாக்காவை உதயநிதி கவனித்துக்கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘எனக்கு தகவல் வரவில்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார் இருப்பினும் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.