Home » Blog » அண்ணாமலை பியூஸ் போன பல்பு… விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அண்ணாமலை பியூஸ் போன பல்பு… விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

by Pramila
0 comment

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசியதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் அதிமுக நிர்வாகி டாக்டர் சரவணன் புகார் அளித்துள்ளார். அதில் “கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் கடுமையான விமர்சனங்களை கூறி தரக்குறைவாக பேசியுள்ளார். தொடர்ந்து அவர் இதுபோன்று தெரிவிக்கும் கருத்துக்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிமுக குறித்தும் எடப்பாடி பழனிசாமி குறித்தும் அவதூறாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார்.

பிஜேபி என்னும் கார்ப்பரேட்டின் மேனேஜர்

அவர் கூறுகையில் அண்ணாமலையப் பொருத்தவரை அவர் மாநிலத் தலைவர் அல்ல. பிஜேபி என்கிற ஒரு கார்ப்பரேட்டின் மேனேஜர். இந்த மேனேஜர் யாருடைய ஆட்டத்துக்கு ஆடுகிறார் என்றால் மு.க.ஸ்டாலின் ஆட்டத்திற்கு ஆடுகிறார். மு.க.ஸ்டாலின், தேர்தல் காலத்தில் பிஜேபிக்கும் எங்களுக்கும் ரகசிய கூட்டணி இருக்கிறது என சொல்லி வந்தார். இன்றோ பிஜேபியும் திமுகவும் ரகசிய கூட்டணி வைத்துள்ளன. இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளும் ஒன்றாகி, ரகசிய கூட்டணி அமைத்து அது பெரிய அளவிற்கு விவாத பொருளாக மாறியிருக்கிறது. இன்று ஸ்டாலின் பேச்சை கேட்டு விட்டு, ‘ரகசிய கூட்டணி இல்லை’ என்று சொல்வதற்காக அந்த மேடையை மிக அநாகரிகமாக பயன்படுத்தியிருக்கிறார்.

அண்ணாமலை நிலைமை ஒரு விட்டில் பூச்சியின் நிலைதான். விட்டில் பூச்சியின் வாழ்க்கை வெறும் 7 நாட்கள்தான். அண்ணாமலையின் அரசியல் நிலைமை இன்று அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இதை மறந்துவிட்டு ஒரு பாரம்பரிய மிக்க ஒரு கட்சியை 52 ஆண்டு பழைமையான கட்சியை…. விமர்சிக்கிறார். அதற்கு அண்ணாமலைக்கு தகுதி இருக்கிறதா?

அதிமுகவை இந்த ஆலமரத்தை ஒழிப்பதுதான் என் வேலை என்று இந்த விட்டில் பூச்சி சொல்கிறார். அதிமுக-வை ஒழிக்க கருணாநிதியால்கூட முடியவில்லை… ஏன், அவரது முப்பாட்டனால் கூட அது முடியவில்லை. இதுதான் வரலாறு, இனி எத்தனை ஏழேழு ஜென்மங்கள் அண்ணாமலை எடுத்தாலும் அதிமுக-வை அழிப்பதற்கு ஒருத்தர் கூட பிறக்க முடியாது.

அண்ணாமலை ஒரு மேலாளர். அதுதான் அவரது நிலை, இபிஎஸ் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். இரண்டு கோடி தொண்டர்களை கொண்டிருக்க கூடிய ஒரு மாபெரும் இயக்கத்தினுடைய தலைவர். அப்படி இருக்கும் ஒருவர் இழிவுபடுத்துகிறார் என்று சொன்னால், இந்த விட்டில் பூச்சி அண்ணாமலையை பியூஸ் போன பல்பாகத்தான் நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். ஆட்சி என்பது தமிழ்நாட்டில் உங்களுக்கு (பாஜக) பகல் கனவாகதான் இருக்கும், அது உங்களுக்கு கானல்நீர்தான். கோட்டை பக்கமே உங்களால் வரமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.