சென்னையில் மெட்ராஸ் ஐ நோய் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பரவி வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மழைக் காலங்களில் சில தொற்று நோய்கள் ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. அதிலும் மெட்ராஸ் ஐ கண் தொற்று அதிக அளவில் பரவக்கூடும்.
இந்த தொற்று நோயானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படக்கூடிய நோய் தொற்றாக இருக்கிறது. இந்த நோய் தொற்று கண் விழிகள் மற்றும் இமைகளுக்கு இடையில் ஜவ்வில் ஏற்படும் வைரஸ் தொற்று.
இந்த வைரஸ் தொற்று காற்று மூலமாக பரவக்கூடும். மேலும் இந்த வைரஸ் தொற்று பாதித்த ஒருவர் பயன்படுத்திய பொருட்களை உபயோகித்தால் இந்த வைரஸ் தொற்று எளிதில் பரவக்கூடும். மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மிக எளிதாக குணப்படுத்தக்கூடிய சாதாரணமான வைரஸ் தொற்றாகும். ஆனால் சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால் அதன் வீரியம் அதிகரிக்கும். மேலும் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மெட்ராஸ் ஐ வைரஸ் தொற்றுக்கான அறிகுறியாக கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்த நிறத்தில் காணப்படுவது, கண் உறுத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். ஒருவரிடமிருந்து ஒருவருக்கு மிக எளிதாக பரவக்கூடும் வைரஸ் தொற்று எனவே பாதிக்கப்பட்ட நபர் மிகப் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.