மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து பல பகுதிகள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. வேளச்சேரி, மணலி, பள்ளிக்கரணை, முகலிவாக்கம், ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம் என சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலைக்கு சென்றதால் அங்கு வாழும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் வேதனைக்கு ஆளாகினர்.
இந்நிலையில் மழைநீர் வடியாத சூழல் பல பகுதிகளில் இன்று வரை நீடித்துக் கொண்டு இருக்கிறது. சில பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்பொழுது ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கனமழையின் காரணமாக பொருட்களை இழந்து வாழ்வாதாரத்திற்கு கேள்விக்குறியான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் வெள்ள நிவாரணத் தொகை தமிழக அரசு எப்பொழுது அறிவிக்கும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
அடுத்த சில தினங்களுக்குள் இது பற்றிய முழு விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியீடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ள பாதிப்பின் போது தமிழ்நாடு அரசு குடிசைகளை இழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம், நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தற்பொழுது ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.