தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மையால் உலக நாடுகள் அனைத்தும் கடும் பயத்தில் உள்ளது. ஆப்பிரிக்கா நாட்டில் குரங்கம்மையில் புதுவடிவிலான வைரஸானது, மிகவேகமாக பரவிவரும் நிலையில், காங்கோ புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா போன்ற நாடுகளுக்கும் பாதிப்பானது பரவியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த 4 ஆப்பிரிக்க நாடுகளில் 222 பேர் க்ளேட் 1பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களில் ஸ்வீடன் மற்றும் தாய்லாந்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், காங்கோவில் மட்டும் ஏறத்தாழ 18 ஆயிரம் பேர் க்ளேட் I மற்றும் க்ளேட் Ib வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, இந்த ஆண்டு மட்டும் இந்த குரங்கம்மை வைரஸ் பாதிப்பால் 615 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு மட்டும் 13 ஆப்பிரிக்க நாடுகளில், 3641 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 622 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரத்தின்படி, நைஜீரியாவில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
இதனைத் தொடர்ந்து உலக சுதாகார அமைப்பு இந்த பரவலை அவசர நிலையாக அறிவித்தது. இத்தகைய சூழலில்தான் உலக நாடுகள் அனைத்தும் மிகத் தீவிரமான ஆய்வில் இறங்கியுள்ளன. இந்த தொற்றானது எதிர்பார்த்ததை விட வேகமாக பரவி வருவதால், ஆய்வாளர்கள் மிக உன்னிப்பாக இதனை கவனித்து வருகின்றனர். அதிலும், வைரஸ் பரவலை கண்காணிப்பதற்கான போதிய நிதி அல்லது உபகரணங்கள் இல்லாத நாடுகளில் பரவும் திறன் வேகமாக உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏனெனில், வைரஸ் பரவும் திறன், வைரஸ் ஏற்படுத்தும் நோயின் தீவிரம் போன்றவற்றை சரியாக கையாள, வைரஸை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒருவர், குரங்கம்மையின் அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.