ரிசர்வ் வங்கி (RBI) அண்மையில் வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள், நகை அடகு கடன்களுக்கு முக்கியமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. இதன் படி, இப்போது வட்டியை மட்டும் செலுத்தி கடனை ஆண்டு ஆண்டு நீட்டிக்க முடியாது. கடன் காலம் முடியும் போதே அசல்தொகையும் வட்டியும் முழுமையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் வங்கிகளில் நகையை அடகு வைத்து கடனாகப் பெற்றுக்கொள்வது, இந்திய மக்களின் மிகப் பொதுவான பழக்கமாகிவிட்டது. குழந்தைகளின் கல்விச்செலவு, மருத்துவத் தேவைகள், குடும்ப நிகழ்வுகள் போன்ற அவசர சூழ்நிலைகளில் நகை அடகு கடன்கள் ஒரு நம்பிக்கையான ஆதாரமாக இருந்தன. ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி (RBI) கொண்டு வந்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள், இந்தத் திட்டத்தின் நிலையை அடியோடு மாற்றியிருக்கின்றன.
புதிய விதிமுறைகள் என்ன?
பழைய நடைமுறையில், ஒருவர் நகையை அடகு வைத்து பெற்ற கடனுக்கு, ஆண்டுதோறும் வட்டியை மட்டும் செலுத்தி, மீண்டும் அடகு புதுப்பிக்க முடிந்தது. இது பலருக்கும் வசதியாக இருந்தது. ஆனால் தற்போது RBI யின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் படி, அடகு காலம் முடிவடையும் போதே வட்டி மட்டுமல்லாமல் அசல்தொகையும் (principal) திருப்பிச் செலுத்தவேண்டும். இல்லையெனில், அந்த நகை ஏலம் விடப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.
கடும் எதிர்ப்பு
இந்த மாற்றத்திற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கிராமப்புற மக்களும், குறைந்த வருமானம் கொண்டவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஒரு வருடம் கழிந்ததும், ஒரே நேரத்தில் பெரும் தொகையை திருப்பிச் செலுத்தும் நிலை, பலருக்கும் சாத்தியமில்லாததாக இருக்கலாம்.
நகை அடகு திட்டங்களில் நியாயமான கட்டுப்பாடுகள் வந்தாலும், பொதுமக்களின் நலனை பாதிக்காத வகையில் முறைப்படுத்துவது முக்கியம். வங்கிகள் நெகிழ்வான திட்டங்களை உருவாக்கவும், RBI தளர்வான வழிகாட்டுதல்களைக் கொண்டுவரவும் தேவை இருக்கிறது. இல்லையெனில், நகை அடகு என்பது ஒருபோதும் ஆதாரமாக இருக்க முடியாது.
இதன் விளைவாக, மக்களில் பெரும் பகுதி அதிர்ச்சியடைந்தது. குறிப்பாக, ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக நகைக்கடன் பெறும் சிறு வருமானம் கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசு, சிறு நகைக்கடன்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. இது மக்களிடையே நம்பிக்கையை வளர்த்துள்ளது.