தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை, பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இது தொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரில் இந்த சம்பவம் வெளியே வந்தது.
அரசியல் தலையீடு இருப்பதாக கூறி, எழுந்த கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் முக்கிய குற்றவாளிகளாக, சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹெரன் பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கின் தன்மையைக் கருதி சிபிஐ அதிகாரிகள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் தவிர வேறு யாரும் வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்ற அறைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வழக்கில் கைதான 9 பேரும் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடந்தது. சாட்சிகளின் அடையாளம் வெளியில் தெரியாமல் இருக்கும்படி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நீதித்துறை சார்பில் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் மொத்தம் 1500 பக்க குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. அரசு தரப்பில் 166 சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. இதில், சபரி ராஜன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆப்பிள் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவை முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களாக இருந்தது.
பாதிக்கப்பட்ட பெண்களில் 8 பேர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சாட்சியம் அளித்திருந்தனர். கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் நீதிமன்றம் 2019ம் ஆண்டு முதல் பெயில் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீதும் 2019 மே 21ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தை நேரடி கண்காணிப்பில், கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று (மே 13) கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதன்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் அரசு தரப்பில் நிவாரணம் வழங்க என வலியுறுத்தப்பட்டுள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி கோவை மகளிர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கவும், மாவட்ட சட்ட சேவை மையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.