நாட்டையே உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (மே 13) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு கடந்து வந்த பாதை
கோவை பொள்ளாச்சி பகுதியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்களை ஒரு கும்பல் தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 2019, பிப்ரவரி 12ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாகவே, இந்த கொடூர சம்பவம் வெளி உலகத்திற்கு தெரிய தொடங்கியது.
இந்த புகாரின் அடிப்படையில் 2019 பிப்ரவரி 24ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருநாவுக்கரசு என்பவர் தொடர்ந்து தலைமறைவாகி இருந்து வந்தார். காவல்துறையால் தேடப்பட்டு வந்த அவர், தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் தொடர்ந்து 2019 மார்ச் 5ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக திருநாவுக்கரசு ஐபோனில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர் இதுவே வழக்கின் திருப்புமுனையாக அமைந்தது.
2019 மார்ச் மாதமே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது இந்நிலையில் வழக்கின் முதல் குற்றவாளி சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றொரு ஆதாரமாக விளங்கியது.
வழக்கின் தன்மை மிகவும் தீவிரமாக இருப்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில், 2019 ஏப்ரல் 25ம் தேதி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் குற்றவாளிகள் 9 பேர் என அடையாளம் காணப்பட்டு சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹெரன் பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்களிடம் தரப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் 2019, மே 24ம் தேதி முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. தொடர்ந்து 2021, பிப்ரவரி 22ம் தேதி இரண்டாவது குற்றப்பத்திரிகை. 2021 ஆகஸ்ட் 16ம் தேதி கூடுதல் குற்றப்பத்திரிகை என 3 குற்றப்பத்திரிகைகள் சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இறுதிவரை 1500 பக்கங்களில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கின் விசாரணையின் போது அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட மின்னணு ஆவணங்கள் அனைத்தும் சாட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அறிவியல் பூர்வமாக அடையாளம் காணுதல் போன்ற பல வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்துள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் தரப்பில் மறைக்கப்பட்டு இருந்த சாட்சியங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 48 பேரும் இறுதிவரை பிறழ் சாட்சியாக மாறாதது வழக்கின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன், இறுதிக்கட்ட விசாரணையின் போது, “குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீதும் வேறு வழக்குகள் இல்லை. அனைவரும் இளம் வயதினர் இவர்களின் வயது உடல்நிலை மற்றும் பெற்றோரை கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
தீர்ப்பு விவரங்கள்
இந்த வழக்கை கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில் இன்று (மே 13) தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதன்படி குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விவரங்களின்படி முதல் குற்றவாளியான A1 சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை, A2 திருநாவுக்கரசு, A5 மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனை, A7 ஹெரன் பால், A3 சதீஷ்க்கு தலா 3 ஆயுள் தண்டனை, A4 வசந்தகுமாருக்கு இரண்டு ஆயுள் தண்டனை மற்றும் A6 பாபு, A8 அருளானந்தம், A9 அருண் குமாருக்கு தலா 1 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து பேசி உள்ள சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன், “குற்றவாளிகள் 9 பேருக்கும் பிரிவு 376 D ( கூட்டுப் பாலியல் வன்கொடுமை), 376 (2) (N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள், 7 ஆண்டுகள், 3 ஆண்டுகள் என தனித்தனியாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் மொத்தமாக 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் சட்ட சேவை மையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிப்பின் தன்மையை பொறுத்து இந்த தொகை அவர்களுக்கு 10 லட்சம், 15 லட்சம் என நிவாரணம் வழங்கும்படி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்து வந்த பாதையை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை பார்த்து தெரிந்துக் கொள்வோம்..