பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள், புதிய சிப் பொருத்திய QR குறியீடு அடங்கிய அடையாள அட்டைகளை பெறுவதற்கான கால அவகாசம் 2025 பிப்ரவரி 15 அன்று முடிவடைகிறது. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு, புதிய அடையாள அட்டை பெறாத வியாபாரிகளின் தற்போதைய அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாநகராட்சி, சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நகர விற்பனைக் குழுவை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 35,588 வியாபாரிகளுக்கு புதிய சிப் பொருத்திய QR குறியீடு அடங்கிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
வியாபாரிகள், புதிய அடையாள அட்டையைப் பெறுவதற்காக, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்கு, முன்னதாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை, மற்றும் கைப்பேசியுடன் வருகை தர வேண்டும். கைபேசிக்கு அனுப்பப்படும் OTP மூலம், தகவல்கள் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.
பிப்ரவரி 15க்குப் பிறகு, புதிய அடையாள அட்டை பெறாத வியாபாரிகளின் தற்போதைய அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் என்பதால், அனைத்து பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காலக்கெடுவுக்குள் புதிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.