தூத்துக்குடி சுற்றுவட்டாரங்களில் பெரும் சூழலியல் மாசுபாட்டை ஏற்படுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையினை அகற்ற வேண்டும் என்று வலியிறுத்தி தூத்துக்குடி மக்கள் நீண்ட வருடங்களாக போராடி வந்தனர். அதன் இறுதிகட்டமாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தினை எதிர்த்து தொடர் போராட்டத்தை எடுத்த மக்கள் அதன் 100 ஆவது நாள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதற்காக 2018 ஆம் வருடம் மே மாதம் 22 ஆம் நாள் ஊர்வலமாக சென்றனர். அந்த ஊர்வலத்தின் மீது காவல்துறை பிரயோகித்த வன்முறையின் காரணமாக போராட்டத்தில் கலந்து கொண்ட 15 பேர் கொல்லப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இப்போராட்டத்தின் காரணமாக அப்போதைய தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையினை தற்காலிகமாக மூட உத்தரவிட்டதை அடுத்து ஆலை மூடப்பட்டது. ஆனால், ஆலை நிர்வாகம் ஆலையினை திறக்க வலியிறுத்தி தொடுத்த வழக்குகளின் இறுதியாக உச்சநீத்மன்றம் ஆலையினை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.
இந்த ஆலையினை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டத்தை ஒருங்கிணைத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையாவது,
“ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் குமரெட்டியாபுரம், காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், மீள விட்டான், பண்டாரம்பட்டி மடத்தூர், பெரியநாயகிபுரம் சிலுவைப்பட்டி, புதுத்தெரு, டூவிபுரம், தேவர்காலனி, VMS நகர் உட்பட பல பகுதிளில் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. பொதுமக்கள் திரளானோர் துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இறந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மக்களின் தலையாய கோரிக்கை “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பே வந்தாச்சி, ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற தாமதம் ஏன்?” என்ற கேள்விதான். தமிழக அரசிடம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் இந்த நேரத்தில் நமது மக்கள் கூட்டமைப்பின் சார்பிலும் இதே கேள்வியை நாமும் கேட்கிறோம்.
தூத்துக்குடி மக்களையும், மண்ணையும் காப்பதற்கு தன்னுயிரை ஈந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள். காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு 6 வருடம் ஆகிறது.
உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசும் சிறப்பாக வாதாடி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உத்தரவு பெற்றது. ஆனால் ஆலை அகற்றப்படாமல் உள்ளதால் மீண்டும் சீராய்வு மனு என்று சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளில் ஆலை நிர்வாகம் நுழைந்து விடக்கூடாது. மக்களிடம் வாக்குறுதி அளித்தபடி தமிழக முதல்வர் அவர்கள் தூத்துக்குடியிலிருந்து நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற (DISMANTLE) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றவாளிகளை அடையாளம் காட்டி, குற்றவியல் நடவடிக்கை, நிர்வாக துறை நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் பரிந்துரைத்தும் இதுவரை தமிழக அரசு குற்றவாளிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்திலும் “பரிந்துரையை செயல்படுத்துவது அரசின் விருப்பம், கட்டாயம் கிடையாது” என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். அதே போல 2022 அக்டோபரில் இது சம்பந்தமாக பிறப்பித்த தமிழக அரசாணையிலும் “துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது” என்பதும் அதிர்ச்சியானது. அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆனால் மக்கள் மன்றத்தில் முதல்வர் உறுதி கூறியது போல உயர் காவல் அதிகாரிகள் உட்பட கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் அதற்கு உரிய சட்ட பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும்,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவு மணிமண்டபம் தூத்துக்குடியின் மையப்பகுதியில் கட்டித் தர வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.”