கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டு வந்தது. இன்று திடீரென்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 680 அதிகரித்து உள்ளது. ஒரே நாளில் தங்கத்தின் விலை அதிகரித்தது இல்லத்தரசிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தற்பொழுது வரலாற்றிலேயே முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ. 48 ஆயிரத்தை கடந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக கருதப்படுகிறது.
மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 80 அதிகரித்த நிலையில் ரூ. 47,440 – க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிரடி உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 48 ஆயிரம் கடந்துள்ளது. இன்று அதிகரித்த தங்கத்தின் விலை வரலாற்றிலேயே முதல்முறையாக இது போன்று அதிரடியாக உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 85 உயர்ந்து ரூ. 6000 கடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 20 நாட்களில் தங்கத்தின் விலை ரூ. 2, 200 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆபரண தங்கம் சவரன் ரூ. 50,000 – ஐ கடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விளையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசு அதிகரித்து 78 ரூபாய் 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 78,200 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.