நடிகர் விஜய் அரசியலுக்கு தான் வரப்போவதாக அறிவித்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவதாக அறிவித்தார். இதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நிறுவி, கட்சியின் கொடி மற்றும் பாடலை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தினார்.
மேலும் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 23ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு, அதற்கு அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடிதம் வழங்கப்பட்டது.
இந்த மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடத்த திட்டமிட்டு, ஏ.டி. எஸ்.பி. திருமால், டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோர், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிலையில் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் மற்றும் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதற்கான வழி, வாகனங்கள் வந்து செல்லும் வழி, வாகன நிறுத்துமிடம், உணவு, கழிவறை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் எழுப்பி விக்கிரவாண்டி காவல்துறையினர் தவெக கட்சியினருக்கு கடிதம் வழங்கியுள்ளனர். இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முறையாக பதிலளிக்கும் பட்சத்தில், காவல்துறை அனுமதியை வழங்கும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மாநாட்டுக்கு தேர்வாகியுள்ள இடம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிகவும் அருகில் அதாவது 300 மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாகத் என தெரிகிறது. ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலை அருகே உளுந்தூர்பேட்டை – எறஞ்சி என்ற இடத்தில், தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடந்தபோது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டின்போதும் இதே நிலை நேரிடக்கூடும் என்பதால், அனுமதி மறுக்கப்படலாம் என்று தெரிகிறது. மாநாட்டுக்காக தேர்வாகியுள்ள பகுதியில் சுமார் பத்து கிணறுகள் இருப்பதும் காவல்துறையின் தயக்கத்துக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. விஜய் விரும்பியபடி முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்குமா என்பது விழுப்புரம் மாவட்ட காவல்துரையின் கையில் உள்ளது.