தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இந்த மாதம் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாடு நடக்க இருக்கும் திடல் பகுதியில் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக மாறியுள்ளது.
தொடர் மழைக்கு இடையே மாநாட்டிற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட மாநாட்டு பணிகளை த. வெ. க. தொண்டர்களும், பணியாளர்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகள் மேலும் வலுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் மேலும் நான்கு கேள்விகள் முன் வைக்கபட்டுள்ளன. மாநாடு நடத்த காவல்துறை சார்பில் ஏற்கனவே 33 கேள்விகள் கேட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் நான்கு கேள்விகள் முன்வைக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது.
காவல் துறை தரப்பிலிருந்து தற்போது எழுப்பப்பட்ட கேள்விகள்:
1. மாநாட்டிற்கு மாவட்டம் வாரியாக வரும் வாகனங்களின் விவரங்கள் (கார், வேன், பஸ்) என்னென்ன?
2. வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருவதால், வாகனம் நிறுத்தும் இடத்தில் தண்ணீர் தேங்கினால், வாகனங்களை நிறுத்த செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன?
3. மாநாடு நடக்கும் 40 ஏக்கரில் வாகனம் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டம் என்ன?
4. 1.5 லட்சம் மக்கள் வருவதாக வாய் மொழியாக தெரிவித்துள்ளதால், அதற்கு எந்த மாதிரியான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது?
என நான்கு கேள்விகள் த.வெ.கவிற்கு கேட்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடர் மழையால் தங்கள் மாநாட்டிற்கு ஏதேனும் தடை ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர் த. வெ.க. தொண்டர்கள்.