சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை நீடித்து வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து பகுதிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மழை தொடர்பான ஆய்வுகளுக்குப் பின் துணை முதலமைச்சர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
சென்னையில் மட்டும் 89 படகுகள், பிற மாவட்டங்களில் 130 படுகுகள் இதுவரை பணியில் நியமிக்கப்பட்டுள்ளன. சென்னையில் 300 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்கிறது. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் வெள்ளத்தைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மருத்துவத்துறையும் மாநகராட்சியும் இணைந்து, தமிழ்நாடு மழைக்கால சிறப்பு முகாமை, தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் திறந்துள்ளது. சென்னையில் மட்டும் 100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 13 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். நாளையும், நாளை மறுநாளும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பள்ளி விடுமுறையைப் பொருத்தவரை முதலமைச்சர் இன்று மாலைக்குள் தெரிவிப்பார்” என அவர் தெரிவித்தார்.