துருக்கியுடன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள், தமது ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, அமைதி வழியில் திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளனர்.
1984-ஆம் ஆண்டு, தனி குர்தீஸ் மாநிலத்தை உருவாக்கும் நோக்குடன் குர்தீஸ் தொழிலாளர் கட்சி (PKK) இந்த கிளர்ச்சியை ஆரம்பித்ததிலிருந்து, இந்த மோதலில் 40,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்நாடு பெரும் பொருளாதார சுமையையும் சந்தித்து வந்தது.
இந்த நிலையில், குர்தீஸ் குழுவை பயங்கரவாத அமைப்பாக கருதி துருக்கி மற்றும் மேற்கத்திய நாடுகள் தடை செய்துள்ளன. அந்தக்குழுவின் தலைவர் அப்துல்லா ஒக்லான், 1999ல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள் குழு தமது போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தது. சிறையில் இருக்கும் அப்துல்லாவை, அண்மையில் துருக்கி அரசியல் தலைவர்கள் சந்தித்து, வன்முறையை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இந்த நிலையிலேயே ஈராக்கில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், குர்தீஸ் தொழிலாளர் கட்சி, தமது ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தது. அத்துடன், அரசியலை முன்னெடுத்து, துருக்கியுடன் அமைதி வழியில் குர்தீஸ் இன மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய துருக்கி அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகன், “பயங்கரவாதமற்ற நாடாக துருக்கியை மாற்றும் நோக்கில் எடுத்த முக்கிய நடவடிக்கை இது” என்று கூறினார்.
மேலும் இந்த முடிவு, NATO உறுப்பினரான துருக்கியின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தும்.