1992 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தால் ரத்னகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 1993 ஆம் ஆண்டு ஆலை அமைப்பதற்கான பணியை நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆலை நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
கடற்கரை மாவட்டமான ரத்தனகிரியில் இந்த ஆலை அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல்கள் பாதிக்கப்படும் என, ஆலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து ஒரு வருடமாக அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிற்குள் புகுந்த ஸ்டெர்லைட் ஆலை மஹாராஷ்டிராவில் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள், தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது ஸ்டெர்லைட் ஆலை. 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் மதிப்பீட்டை தாக்கல் செய்ய தடையில்லா சான்றிதழை வழங்கியது.
மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து 25 கி.மீ சுற்றளவுக்குள் ஆலை அமைக்க கூடாது என்பது விதி. ஆனால், மக்களின் எதிர்ப்புகளை மீறி, பல்வேறு நிபந்தனைகள் மீறப்பட்டு,14 கி.மீ தொலைவில், தூத்துக்குடி பகுதியில் ஆலை அமைக்கப்பட்டது. 1996ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி ஆலையை இயக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
ஆலையால் தொடங்கிய பிரச்சனை
ஆலை தொடங்கப்பட்ட சில மாதங்களில் பொதுமக்களிடமிருந்து புகார்கள் குவியத் தொடங்கியது. ஆலை அருகே அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஆலையிலிருந்து வெளிவரும் புகை காரணமாக தலைவலி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக புகார் கூறினர். தொடர்ந்து ஆலை அருகே இருந்த உலர் பூக்கள் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர், ஆலையில் இருந்து வெளிவரும் புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆய்வில் வெளிவந்த உண்மைகள்
1998ம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) ஸ்டெர்லைட்டின் மாசுபாடு குறித்த ஆய்வை சமர்ப்பித்தது. இதில், ஆலையில் அங்கீகரிக்கப்படாத பொருட்களை உற்பத்தி செய்வது. நிலத்தடி நீரை மாசுபடுத்தியது. நிபந்தனைகளை மீறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், 1998ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி, உயர்நீதிமன்றத்தை உத்தரவின்பேரில் தொழிற்சாலை மூடப்பட்டது.
தொடர்ந்துகொண்டே இருந்த பிரச்சனைகள்
1998, 1999, 2003 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன அறிக்கைகள், ஆலை காற்றுச் சட்டத்தின் கீழ் வகுத்துள்ள தரநிலைகளை கடைபிடிக்காதது போன்ற பல்வேறு பிரச்னைகள், ஆலையை சுற்றி நிகழ்ந்துகொண்டே இருந்தது. மக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்த வண்ணமே இருந்தன.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு
1997 முதல் 2012 வரை பல்வேறு வகையான சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக தாமிர உறுபதியை மேற்கொண்டது. மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, மக்களுக்கு 100 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க, ஆலை நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
ஒடிசாவில் இருந்து விரட்டப்பட்ட வேதாந்தா
ஒடிசா மாநிலம், நியமகிரி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சார்பில் பாக்சைட் சுரங்கம் நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அம்மாநிலத்தின் பிரதான பழங்குடியின டோங்காரியா கோந்த் சமூகத்தினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து 108 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின கிராம மக்கள் இணைந்து, கிராம பஞ்சாயத்துகளில் ஆலையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினர். அதன் விளைவாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்தது.
ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட இயற்கை வளம் வேதாந்தா என்பது உலகின் மிகப்பெரிய உலோகம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனம். அதன் துணை நிறுவனம் தான் ஸ்டெர்லைட். விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் இதனால் மக்களுக்கு ஏற்பட்ட நோய்களும் இன்றளவிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த ஆலையினால் மக்கள் உடல்ரீதியான பல பிரச்சனைகளை அனுபவித்தனர். குறிப்பாக ஆஸ்துமா மற்றும் சுவாச நோய்கள், காது-மூக்கு-தொண்டை கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள் போன்ற பல சுகாதார பாதிப்புகளுக்கு வழிவகுத்தது.
ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையின் தாக்கத்தால் நெஞ்சு எரிச்சல், மூச்சுத் திணறல், புற்றுநோய், சிறுநீரக கோளாறுகள் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர், மண் வளம் பாதிக்கப்படுகிறது என ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது.
ஆலையில் உள்ள தாமிர கசடுகளில் ஆர்சனிக் அதிக அளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், ஓடையில் உள்ள தண்ணீரில் கலந்து, சுற்றுச்சூழல் மாசுக்களை ஏற்படுத்தியது. மேலும், இந்த கழிவுகள் 2016ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள நீரில் கலந்து, ஊருக்குள் புகுந்துள்ளது. இது மக்கள் பயன்படுத்தும் நீரிலும் கலந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று அடுத்த தலைமுறையினரையும் பாதித்து சுற்றுச்சூழல் அபாயங்களை ஏற்படுத்தும் இந்த ஆலை எங்களுக்கு வேண்டாம் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.
ஆலை விரிவாக்கமும் – மக்கள் எதிர்ப்பும்
20 ஆண்டுகளை கடந்து இயங்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சிப்காட் பகுதியில், தனது 2வது ஆலையின் விரிவாக்க பணிகளை மேற்கொண்டது. இதை எதிர்க்கும் வகையில் 2018ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி மக்கள் போராட்டம் தொடங்கியது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் 2வது ஆலையின் விரிவாக்கத்திற்கு 640 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு சிப்காட் மூலம் கையகப்படுத்தியுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.
புதிதாக அமையவிருக்கும் ஆலை ஏற்கனவே உள்ள ஆலையை விட 4 மடங்கு பெரியது. இதனால் பாதிப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, மக்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு அமைய உள்ள 2வது ஆலைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று குழந்தைகள் முதல் வயதானோர் வரை போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலரை காவல்துறையினர் கைது செய்தனர். எனினும், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது.
ஆலையால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி தூத்துக்குடி மற்றும் குமரரெட்டியாபுரம், ஸ்ரீ வைகுண்டம், புதியம்புத்தூர், முத்தையாபுரம், முள்ளக்காடு உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு போராட்டங்கள் கிளம்பியது.
ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதிக்கக் கோரியும், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கூறியும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தனர். மேலும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 2018, மார்ச் 24ம் தேதி வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் என அனைத்து கடைகளும் முழு கடையடைப்பில் ஈடுபட்டனர். ஆட்டோ, வேன், மினி பஸ்கள் என எந்த வாகனங்களும் ஓடவில்லை.
2000 மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். 50-க்கும் அதிகமான சங்கங்கள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தை அடுத்த நாளும் நீட்டிக்கவும் ஆதரவளித்தனர்.
தொடர்ந்து நடந்த போராட்டம், 100வது நாளை எட்டியது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, ஆலைக்கு எதிரான உத்தரவுகளை பெற்றாலும், அதிகார வர்கத்தின் ஆதரவோடு செயல்பட்ட ஆலையை நிரந்தரமாக மூட முடியவில்லை. பொதுமக்களுக்கு காலம் காலமாக சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கொடுத்து வந்த இந்த ஆலை, 13 உயிர்களை பறித்து தான் நிரந்தரமாக மூடப்பட்டது.
ஆலை விரிவாக்கத்திற்கு எதிராகவும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் தொடர்ந்து போராடி வந்த மக்கள், போராட்டத்தின் 100வது நாளான 2018, மே 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். அப்போது பொதுமக்களை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சித்தது. அப்போது நடைபெற்ற கல்லெறி சம்பவங்கள், கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என நடந்த போராட்டம், இறுதியில் கலவரமாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பறிபோனது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுபோன்ற கொடூர நிகழ்வை, நடத்த யார் உத்தரவிட்டது என்ற கேள்விக்கு இன்று வரை பதில் கிடைத்ததாக தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் தவிர, உயரதிகாரிகள், ஐ.ஜி உள்ளிட்டோரிடம் எந்த உத்தரவும் பெறாமல் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக அருணா ஜெகதீசன் ஆணையம் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சி தந்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை பொதுமக்களின் பேரணியின்போது 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, அப்போதைய அதிமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும் என அறிவிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தெற்கு ஐஜி சைலேஷ் குமார், டிஐஜி கபில் குமார் சி சராட்கர், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்கதிருமாரன் ஆகிய உயரதிகாரிகளின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையால்தான் இந்தத் தப்பாக்கிச்சூடு நடந்ததாக தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
“துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த நாளுக்கு முந்தைய நாளான மே 21 முதல் 23 வரை பொதுக்கூட்டம் நடத்தவோ, ஊர்வலமாகச் செல்லவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது எனவும் ஆனால், இது முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதா என்பது கேள்விக்குரியதாக உள்ளது. இந்த உத்தரவு மக்களுக்கு தாமதமாக கிடைக்கப்பெற்றதால், மக்கள் தடையை மீறி ஊர்வலமாக சென்றதாக கூறுவது தவறு” என்கிறது அறிக்கை.
மேலும், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று மாவட்ட ஆட்சியர் தனது அலுவலகத்தில் இல்லாமல், சம்பவத்தை துணை ஆட்சியர் பிரசாந்தை கையாள விட்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் காவல்துறை நிச்சயமாக வரம்பை மீறி செயல்பட்டுள்ளது உறுதியாகிறது. எனவே, 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்தது.
மேலும், தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அளித்துள்ள சாட்சியத்தில், ” மாவட்ட ஆட்சியர் மே 21ம் தேதி 9 மணிக்கு மேல் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். தடை உத்தரவு பிறப்பித்த விவரம் அவருக்கு மறுநாள், அதாவது மே 22 அன்று காலை 6 மணிக்கு தான் அவருடைய எழுத்தர் உத்தரவின் நகலைக் கொடுத்த போது தெரிய வந்தது” எனக் கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போது, படித்த இளைஞர்களை மட்டுமே குறி வைத்து கைது செய்து, சிறையில் அடைத்திருக்கிறார்கள். வீடுகளின் உள்ளே இருந்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டிருக்கின்றனர்.
சீருடை அணிந்த மற்றும் அணியாத காவலர்கள், வீட்டிற்குள் நுழைந்து கைது செய்து, கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று விளக்கம் எதுவும் தரக்கூட வாய்ப்பளிக்காமல், பல வகையில் தாக்கி இருக்கின்றனர் என ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.
அறிக்கையில், காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான சூழலே ஏற்படவில்லை என்றும், பொதுமக்கள் யாரும் எந்த ஆயுதங்களைக் கொண்டும் போலீசாரை தாக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு
22ம் தேதி, மதியம் 12 முதல் 1:30 மணி வரை ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக சாட்சியத்தின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு 3 மணியளவில் திரேஸ்புரத்தில் நடந்துள்ளது. இந்த இரண்டிலும் 12 பேர் இறந்துள்ளனர். அதில் ஒருவர், துப்பாக்கிச் சூடு காயங்களாலும் மிதிபட்டு நசுங்கியதாலும் இறந்திருக்கிறார்.
மறுநாள் மே 23ம் தேதி அண்ணா நகரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று, இளைஞர் ஒருவர் அந்தக் காயங்களால் இறந்திருக்கிறார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் நிவாஸ் மாறன், விசாரணையின்போது 9 காயம்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அனைவரும் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
இரண்டு நபர்கள் கடுமையான காயங்களுடன் கொண்டு வரப்பட்டதாகவும் அவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு அன்றே இறந்து விட்டார்கள் என்றும் மருத்துவர் நிவாஸ் மாறன் விசாரணையில் கூறியுள்ளார். மேலும், அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 12 நபர்களும் இறந்து விட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த 12 பேரும் 108 ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இறந்தவர்கள் போக, கடுமையான காயங்களோடு மரணத்தின் பிடியில் இருந்தவர்களும் தனியார் ஆம்புலன்ஸில் தான் கொண்டு வரப்பட்டார்களே தவிர, ‘108’ ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சியர் வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு
ஐஜி சைலேஷ்குமார் யாதவ், ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது டிஐஜி அறிவுரையின்படி, அவருடைய ‘கன்மேன்’ சங்கர், 5 முறை 9 மி.மீ பிஸ்டலில் போராட்டக்காரர்களின் மீது சுட்டார். ஆய்வாளர் ரென்னீஸ் அவருடைய பிஸ்டலுடன் ஓடி, போராட்டக்காரர்களைச் சுட்டார்.
டிஐஜி அளித்துள்ள சாட்சியத்தின்படி, துப்பாக்கிச் சூட்டில் உடனடியாக 5 நபர்கள் இறந்து விட்டனர். ஐஜி சைலேஷ்குமார் யாதவ் இருந்தும் அவருடன் எந்தவித ஆலோசனையோ பேச்சுவார்த்தையோ நடத்தவில்லை. டிஐஜி பொறுப்புணர்வு இல்லாமல் மனம் போன போக்கில் செயல்பட்டதாகத் தெரிகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
வீடியோ காட்சிகளின் மூலம், கார்த்திக், ஸ்னோலின் மற்றும் ரஞ்சித்குமார், ஆட்சியர் அலுவலகத்திற்குள் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு விழுந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் துப்பாக்கிச் சூடு 11:57 மணிக்கும் 12.06 மணிக்கும் இடையே நடைபெற்றுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைவரின் மரணமும் முதலாவது துப்பாக்கிச் சூட்டில் பாய்ந்த தோட்டா காயங்களால் ஏற்பட்டுள்ளது என்று உறுதியாக முடிவு செய்யலாம் என ஆணையம் கூறுகிறது.
முரணான சிபிஐ குற்றப்பத்திரிக்கை
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ சார்பில் 2 குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த 2 குற்றப் பத்திரிகையிலும், எந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டிற்காக, “சம்பவ இடத்தில் இருந்த துணை வட்டாட்சியர் சேகர் என்பவர்தான் ஒப்புதல் கொடுத்துள்ளார். அவர் இந்த உத்தரவை பிறப்பிக்க உகந்த அதிகாரி இல்லை என்றாலும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதனால், அவர் மீது எந்தத் தவறும் இல்லை,” என சிபிஐ தாக்கல் செய்த 2ம் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் நடவடிக்கை குறித்து குறிப்பிட்டுள்ள சிபிஐ, துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும் என போலீசார் முன்கூட்டியே திட்டமிட்டுச் செல்லவில்லை என்றும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.
மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது
அரசின் ஆணையமும், சிபிஐ-ம் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளில் முரணான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக மக்கள் கூறுகின்றனர்.
அரசு எங்களுக்கு நிதியுதவி வழங்குவதாலோ, அரசு வேலை வழங்குவதாலோ இந்த இழப்பு எங்களை ஆறுதல் அடையச்செய்யாது. இந்த கொலைகளை செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு நீதி கிடைக்கும் என துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடுமபத்தினர் தெரிவிக்கின்றனர்.
8 வருடங்களை கடந்தாலும் அந்த பகுதி மக்களின் மனநிலை இன்னும், அச்சம்பவத்திலிருந்து மீள முடியாத வகையில் தான் உள்ளது என்பது, அவர்களின் பேச்சுக்களும் செயல்களினாலுமே நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
அரசும் மக்களும்
மக்கள் இல்லாமல் ஒரு அரசு கிடையாது. மக்களுக்காக இயங்குவதுதான் அரசே தவிர, மக்களையும் அவர்களின் போராட்டங்களையும் ஒடுக்கி அதன்மூலம் அரசு செயல்பட முடியாது. மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துதல். அறவழியில் போராடும் மக்களுக்கு, அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை எவ்வித இடையூறும் இல்லாமல் பெற்றுத் தருவதே நல்ல அரசாக அமைய முடியும்.