Thursday, September 18, 2025
Home » Blog » உச்சநீதிமன்றத்தின் மீது கேள்விகளை அடுக்கிய குடியரசுத் தலைவர்

உச்சநீதிமன்றத்தின் மீது கேள்விகளை அடுக்கிய குடியரசுத் தலைவர்

by Pramila
0 comment

மாநில அரசின் ​​மசோதாக்கள் மீது முடிவெடுக்க, குடியரசுத் தலைவருக்கு கால வரம்பை நிர்ணயிக்க முடியுமா என கேட்டு, உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகள் அடங்கிய குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த குறிப்பு என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143 (1) இன் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அனுப்பியுள்ளார்.

அதில்,

  1. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 இன் கீழ் ஒரு மசோதா ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும் போது, அவருக்கு உள்ள அரசியலமைப்பு உரிமைகள் என்ன?
  1. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 இன் கீழ் ஒரு மசோதா அவருக்கு முன் சமர்ப்பிக்கப்படும் போது, ​​அமைச்சரவையால் வழங்கப்படும் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?
  1. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
  1. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 361, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 இன் கீழ், ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறு ஆய்வுக்கு முழுமையான தடையா?
  1. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசமும், ஆளுநரால் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறையும் இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்கு, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
  1. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 201 இன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
  1. அரசியலமைப்பின் 201 வது பிரிவின் கீழ் குடியரசுத்தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
  1. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143 இன் கீழ் ஒரு குறிப்பு மூலம் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டுமா மற்றும் ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அல்லது வேறு விதமாக ஒதுக்கும் போது உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
  1. அரசியலமைப்பின் பிரிவு 200 மற்றும் பிரிவு 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள், சட்டத்திற்கு முந்தைய கட்டத்தில் நடைமுறைக்கு வருமா? ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் அதன் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?
  1. அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ், அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதையும், குடியரசுத் தலைவர், ஆளுநர் உத்தரவுகளையும் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?
  1. மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டம், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா?
  1. அரசியலமைப்பின் பிரிவு 145(3) இன் அடிப்படையில், நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அதன் முன் நடவடிக்கைகளில் உள்ள கேள்வி அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்த பட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?
  1. அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவர், ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா? முரணான உத்தரவுகளை பிறப்பித்தல் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?
  1. சட்டப்பிரிவு பிரிவு 131 இன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புத் தடைசெய்கிறதா?

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ஏன் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்தது? என்ன நடந்தது இந்த வழக்கில் என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய 22 மசோதாக்கள் மீது, எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார்.

இதில் பல்கலைக்கழக சட்டங்களை மாற்றியமைப்பது தொடர்பான 10 மசோதாக்களை கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.

ஆனால், திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களின் மீது ஆளுநர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இந்நிலையில், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.டி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தன. கடந்த ஏப்ரல் 8ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் எதிரானது” என  கூறினர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், “அதன்பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல” எனக் கூறினர். மேலும், இந்த வழக்கின் போது ஆளுநரின் அதிகாரத்தை நீதிபதிகள் கேள்விக்குள்ளாகினர்.

தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர். மேலும், அந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

தீர்ப்பில், ‘ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் என்பதற்கு சட்டத்தில் இடமில்லை. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் ஏதாவது ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்’ என நீதிபதி ஜே.டி.பர்திவாலா குறிப்பிட்டார். மேலும், சட்டப்பேரவையில் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் போது அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளதாகவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

‘ஒரு மசோதா கிடைத்ததும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் அதைப் பற்றி 3 மாதங்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு 1 மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும்,  மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மசோதா மீது முடிவெடுப்பதற்கான கால அளவை உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில்தான், குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திற்கு இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதற்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்குமா? அல்லது அரசியல் சாசன அமர்வு நியமிக்கப்பட்டு இது விசாரிக்கப்படுமா? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

மாநில அரசு, ஆளுநர் என்று இருந்த மோதல் போக்கு, தற்போது மத்திய அரசு, உச்சநீதிமன்றம், குடியரசுத்தலைவர், ஆளுநர் மற்றும் மாநில அரசு என மாறியுள்ளது. இதனை எவ்வாறு கையாளப் போகிறது உச்சநீதிமன்றமும் அரசுகளும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.