தமிழகத்தில் கடந்த மாதம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பள்ளிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்று உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து தற்பொழுது சென்னையில் உள்ள கோவில்களுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்னையில் உள்ள கோவில்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. சென்னையில் உள்ள பல கோவில்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் வெடித்து சிதறும் என்றும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள கோவில்களில் அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் பல முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசார் சோதனை நடத்தியதில் இதுவரை எந்த ஒரு வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை என்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது வதந்தி என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது மேலும் மின்னஞ்சல் மூலம் வந்த ஐபி முகவரியை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.