இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் இறப்பு செய்தி திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உடல்நல குறைவு காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரணி திடீரென்று நேற்று காலமானார்.
இவர் கடந்த ஐந்து மாதம் காலமாகவே இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பவதாரணி தந்தை இளையராஜா மற்றும் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இவர்களின் இசையில் பின்னணி பாடகியாக பணியாற்றி வந்தார்.
இளையராஜா இசையமைத்த ராசையா திரைப்படத்தில் முதன் முறையாக பின்னணி பாடகியாக அறிமுகமானார் பவதாரணி, இவர் பாடிய மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தந்தை இளையராஜா மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜா இசையில் பல பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் மழலை கலந்த இன்னிசைக் குரலில் ரசிகர்களை பல பாடல் வழியாக கவர்ந்துள்ளார். அழகி திரைப்படத்தில் ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்.
கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பவதாரணி இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். பவதாரணியின் உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது.