இயற்கை நிறைந்த அழகை கொண்டுள்ள கொடைக்கானல் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும். தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்த வண்ணம் இருப்பார்கள். தமிழ்நாடு மற்றும் இன்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவார்கள். அனைத்து காலநிலைகளிலும் கொடைக்கானலுக்கு வெளிநாட்டவர் உட்பட அனைவரும் பார்வையிட வருவார்கள்.
பள்ளி கல்லூரி விடுமுறை மற்றும் வார விடுமுறையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இதைத் தொடர்ந்து தற்பொழுது திரைப்படம் ஒன்றின் மூலம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. கடந்த மாதம் மலையாளத் திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரையரங்கு வெளியிடப்பட்டது. கேரளா மட்டும் இன்றி தமிழகத்திலும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் வனப்பகுதியில் அமைந்துள்ள குணா குகை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அந்த பகுதிக்கு உயிரோட்டத்தை அந்த படத்தில் கொடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகையை பார்வையிடுவதற்கு ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். மிக முக்கியமாக கேரளாவை சேர்ந்தவர்கள் கடந்த ஒரு வாரம் காலமாக அதிகமாக வந்த வண்ணம் உள்ளனர். மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட ரசிகர்கள் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றனர்.